மிக்ஜாம் புயலால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில், குறிப்பாக சென்னையில் பல இடங்களில் மழைநீர் வடியாததால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், புயல் மீட்பு பணிகளுக்காக விஜயவாடாவில் இருந்து 5 குழுக்களை சேர்ந்த 125 வீரர்கள் தமிழகம் வந்துள்ளனர். அதன்படி, விஜயவாடாவில் வந்துள்ள 2 குழுக்கள் வேளச்சேரி மற்றும் பள்ளிக்கரணையில் மீட்பு பணிக்கு விரைந்துள்ளது. மீதமுள்ள 3 குழுக்கள் சென்னையின் மற்ற பகுதிகளில் வெள்ள மீட்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர். ஏற்கனவே அரக்கோணத்தில் இருந்து வந்த தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் சென்னையில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தற்போது கூடுதலாக 5 குழுக்கள் வந்துள்ளது. இதனிடையே, சென்னை உட்பட 4 மாவட்டங்களில் 25 பேர் கொண்ட 19 NDRF குழுக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், சென்னையில் முழுமையான இயல்பு நிலையில் விரைவில் வரும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்த சூழலில், சென்னையில் மழை பாதிப்பு தொடர்பாக மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை வழங்க காவல்துறை சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 004-23452360, 004-23452361, 004-23452377 ஆகிய உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் அழுகிய 4 மாவட்டங்களில் நடமாடும் மழைக்கால மருத்துவ சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. 300 நடமாடும் மருத்துவ சிறப்பு முகாம்கள் செயல்பட்டு வருகிறது. 




இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் நிவாரண பொருட்களை மாவட்ட நிர்வாகம் சார்பாகவும் மாநகராட்சி சார்பாகவும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. மேலும் சென்னை பகுதியில் பல இடங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரை சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு வலு சேர்க்கும் விதமாகவும், நிவாரண பணிக்காக விரைவாக முடிப்பதற்காக, திருச்சி மாநகராட்சி சார்பில் கடந்த 4ம் தேதி தூய்மை பணியாளர்கள் 300 பேர் மற்றும் 10 தூய்மைபணி மேற்பார்வையாளர்கள் 3 சுகாதார அலுவலர்கள் என 363 பேர் வெள்ள தடுப்பு உபகரணங்களுடன் 5 பேருந்துகள் மூலம் திருச்சியில் இருந்து சென்னை சென்று அங்கு தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்த நிலையில் திருச்சி மாநகராட்சி சார்பில் சென்னையில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தேவையான அரிசி மளிகை பொருட்கள் போர்வைகள் பிஸ்கட் பாக்கெட்டுகள் பிரட்,பாய், மருந்து பொருட்கள் குடிநீர் பாட்டில்கள் என 25 லட்சம் மதிப்பிலான பொருட்களை இன்று திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் வாகனத்தில் அனுப்பி வைத்தனர்.