இந்திய அரசியலமைப்பின் தந்தை’ எனப் போற்றப்படும் பாபாசாகேப் அம்பேத்கர் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் ஆவார். பட்டியலின மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் பெண்களின் உரிமைகளுக்காக போராடிய அண்ணல் அம்பேத்கர் 1956 டிசம்பர் 6-ஆம் தேதி தனது 65வது வயதில் காலமானார். பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி இன்று காலையில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
மேலும், அவரது நினைவு நாளை முன்னிட்டு பிரதமர் மோடி X சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருந்தது.. பாபாசாகேப் அம்பேத்கர், இந்திய அரசியலமைப்பின் சிற்பியாக இருந்ததோடு, சமூக நல்லிணக்கத்தின் அழியாமல் இருக்கப் பாடுபட்டவர், அவர் பின்தங்கிய மக்களின் நலனுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவரது மஹாபரிநிர்வாண நாளான இன்று அவருக்கு எனது பணிவான வணக்கங்கள் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் திருச்சி அரிஸ்டோ மேம்பாலம் அருகே உள்ள அம்பேத்கர் திரு உருவ சிலைக்கு திருச்சி மாவட்ட பாஜக சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட தமிழ்நாடு பாஜக மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் செய்தியாளர்களை சந்தித்து பேசியது..
டாக்டர் அம்பேத்காரின் புகழையும் ,அவர் இந்த தேசத்திற்காக ஆற்றிய பங்களிப்பையும் பாரதிய ஜனதா கட்சி உலகம் முழுவதும் எடுத்துச் சென்று அவருடைய புகழை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து செய்வோம் என்றார்.
சென்னை முழுவதும் வெள்ள காடாக காட்சியளிக்கிறது. மக்கள் அனைவரும் வீட்டின் மாடியில் நின்று கொண்டு உணவிற்கும், தண்ணீருக்கும் கையேந்தும் நிலை உருவாகியுள்ளது.
தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள், தனது பாதயாத்திரை ரத்து செய்துவிட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கிக் கொண்டிருக்கிறார். அதேபோல் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் மக்களுக்கு தேவையான அனைத்து நிவாரண பணிகளை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டு காலமாக ஆட்சி செய்த திராவிட கட்சிகளின் லட்சணத்தை தற்போது நாம் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் புயல் வந்தாலும், மழை வந்தாலும், இதே நிலைமை தான் நீடித்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதற்கு ஒரு முடிவு காலம் ஏற்படவில்லை. மேலும் ஆட்சிக்கு வந்தவுடன் என்ன திட்டங்கள் செயல்படுத்தலாம் அதில் எவ்வளவு கமிஷன் அடிக்கலாம் என்ற எண்ணங்களில் மட்டுமே ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற பாதிப்பு ஏற்பட்டு கொண்டிருக்கும் போது ஆட்சியில் இருப்பவர்கள் இதற்கான ஒரு தீர்வை இதுவரை யாரும் செய்யவில்லை என குற்றம் சாட்டினார். ஆகையால் 2026 ஆண்டு பாஜக ஆட்சி நடைபெறும் போது இது போன்ற நிலைமை சென்னையில் நிகழாது.
தமிழ்நாடு அரசு 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ததாக கூறுகிறார்கள். ஆனால் அதற்கான எந்த பணியும் நடந்ததாக தெரியவில்லை. ஆகையால் தமிழ்நாடு அரசு 4,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து என்னென்ன திட்ட பணிகள் நடைபெற்றது, அதற்கு எவ்வளவு நிதிகள் செலவிடப்பட்டது . முழுமையாக திட்டங்கள் முடிக்கப்பட்டதா என்பதை குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். அப்போதுதான் மக்களுக்கும் தெரியவரும் என்றார்.