மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து தேசிய அளவில் காற்றின் தரத்தை மேம்படுத்தும் நகரங்களில் 'தூய்மை காற்று' கணக்கெடுப்பை நடத்தியது. மேலும் 2025-26-ம் ஆண்டுக்குள் நாட்டில் காற்று மாசுபாட்டை 40 சதவீதம் வரை குறைப்பதற்காக தேசிய தூய்மை காற்று திட்டத்தின் கீழ் பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த கணக்கெடுப்பில் நாடு முழுவதும் உள்ள 131 நகரங்கள் கலந்து கொண்டது. இதில் மக்கள் தொகை அடிப்படையில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 47 நகரங்கள், 3 முதல் 10 லட்சம் வரை மக்கள் தொகை கொண்ட 44 நகரங்கள், 3 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட 40 நகரங்கள் என 3 குழுக்களாக பிரிக்கப்பட்டன. தமிழ்நாட்டில் திருச்சி, சென்னை மற்றும் மதுரை ஆகியவை 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. 


இந்த நகரங்களில் காற்றின் தர அளவீட்டின் அடிப்படையில் இல்லாமல், வெவ்வேறு களங்களில் காற்றின் தரத்தை மேம்படுத்த நகரங்கள் எடுத்த நடவடிக்கைகளின் அடிப்படையில் மதிப்பீடு நடந்தது. இதில் வாகனங்கள் மூலம் ஏற்படும் காற்று மாசு, சாலையில் தூசி இல்லாமல் வைத்தல், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றும் கழிவுகள் மற்றும் திடக்கழிவுகளை எரித்தல், பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு, தொழில்துறை காற்று மாசு கண்காணிப்பு அமைப்பு, காற்று மாசு விதிமுறைகளை கடைபிடிக்கும் தொழிற்சாலைகள், சாலைகளின் மொத்த நீளத்திற்கு ஏற்ப நடைபாதை அமைப்பது போன்ற பிரிவுகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.




மேலும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் நகரங்களில் காற்றின் தரத்தை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆதார ஆவணங்களுடன் சுய மதிப்பீட்டை சமர்ப்பித்தன. அந்த ஆவணங்களை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் காற்றின் தரக் கண்காணிப்புக் குழு ஆகியவற்றால் சரிபார்க்கப்பட்ட பிறகு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இதில் சுற்றுப்புற காற்றின் தர அளவை பாதிக்கும் 8 முக்கிய துறைகளின் கீழ் 200 மதிப்பெண்களில் மதிப்பிடப்பட்டது. இதில் தேசிய அளவில் 200-க்கு 187 மதிப்பெண் பெற்று இந்தூர் முதல் இடமும், 186 மதிப்பெண்களுடன் ஆக்ரா 2-வது இடமும், 185.2 மதிப்பெண்களுடன் தானே 3-வது இடமும் பெற்றது. திருச்சி மாநகராட்சி 180.5 மதிப்பெண் பெற்று 6-வது இடத்தை பிடித்தது. இது தமிழகத்தில் முதல் இடம் ஆகும். மேலும் 124.4 மதிப்பெண்களுடன் சென்னை 37-வது இடத்திலும், 82 மதிப்பெண்களுடன் மதுரை 44 இடத்தையும் பிடித்துள்ளன.


இதுகுறித்து திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் கூறுகையில், "திருச்சியில் உள்ள தொழிற்சாலைகளில் சுத்தமான எரிபொருளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காற்றின் தரத்தை மேம்படுத்த மாநகரில் மரக்கன்றுகள் நடுதல், சாலை ஓரங்களில் வண்டல் மண் குவிவதை தடுக்க சாலைகளை முழுமையாக அமைப்பது போன்ற தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்" என்றார்.