சென்னை காமராஜர் அரங்கத்தில் சனாதன ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என பேசினார். இது இந்திய அளவில் பெரும் சர்ச்சையை எழுப்பி உள்ளது. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக இந்து அமைப்பினர் பாஜக தலைவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக சாமியார் ஒருவர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி நிர்ணயித்தார். இந்நிலையில் சனாதன தர்மத்தை ஒழிப்பதாக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் மீது நடவடிக்கை கோரி பா.ஜனதாவினர் கவர்னரை சந்தித்து மனு கொடுத்தனர். மேலும், 10-ந்தேதிக்குள் அமைச்சர் சேகர்பாபு பதவி விலகாவிட்டால் 11-ந்தேதி அவரை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று அண்ணாமலை அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் இன்று சனாதன தர்மத்தை இழிவுப்படுத்திய அமைச்சர் உதயநிதியை கைது செய்ய வேண்டும். மாநாட்டில் பங்கேற்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, திருச்சி திருவானைக்காவலில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் முன்பு, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. அப்போது ஒலிபெருக்கி வைக்க போலீசார் அனுமதி வழங்காததை கண்டித்து ஹெச். ராஜா போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து இணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட சென்ற பாஜகவினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஹெச். ராஜா பேசியதாவது: திராவிடம் என்பது சித்தாந்தம். சனாதனம் என்பது மனிதர்கள். 80 கோடி மனிதர்களை கொலை செய்வேன் என்று பேசுவது சரியா? அமைச்சர் உதயநிதியை கைது செய்யும் வரை, சேகர் பாபு அமைச்சர் பதவியில் இருந்து விலகும் வரை எங்களது போராட்டம் தொடரும், உதயநிதி ஸ்டாலின் பேசுவதற்கு என்ன தகுதி இருக்கு. ஆணவ கொலைகள் திருமாவளவன், சுப வீரபாண்டியன் வந்த பிறகு தான் வந்தது. ஆர்.ராசாவுடன் விவாதம் செய்வதற்கு நான் தயாராக இல்லை” என்றார்.
போராட்டத்திற்கு பங்கேற்க வந்ததில் இருந்தே ஹெச். ராஜா கடும் கோபத்துடன் காணப்பட்டார். குறிப்பாக, ஒலிபெருக்கிக்கு கூட அனுமதி வழங்காதது ஏன்? என்று கேட்டு காவல்துறை அதிகாரிகளை கடுமையாக சாடினார். ஒரு கட்டத்தில், 'பாஜக ஆட்சிக்கு வந்தால் காவல்துறையின் காக்கிச் சீருடை, காவி நிறமாக மாற்றப்படும்' என்றும் கூறி அதிரடித்தார். இதனை தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.