திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் ஏற்பாட்டில் நடைபெற்ற மாபெரும் இலவச வேலை வாய்ப்பு முகாம் தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அருகில் நடைபெற்றது. இதில் ஏராளமனோர் கலந்துக்கொண்டனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசர் பேசியதாவது: கர்நாடகாவிற்கு சென்று இருந்தபோது காவிரி நதி நீர் பிரச்சனை குறித்து அந்த மாநில முதலமைச்சரிடம் பேசினேன். அதற்கு உதவி செய்யக்கோரி கேட்டபோது அவர், செய்கிறேன் என தெரிவித்தார். மேலும் இது தனியாக ஒருவர் செய்து முடித்து விடும் வேலை அல்ல. இது 50 ஆண்டுகளாக இருக்கக்கூடிய பிரச்சனை. இதை சட்ட ரீதியாக மாநில அரசுகள் முதலமைச்சர், சம்பந்தப்பட்ட துறையின் மத்திய அமைச்சர், உச்ச நீதிமன்றம் வரை இருக்கக்கூடிய ஒரு பிரச்சனை. ஏற்கனவே மாத,மாதம் தண்ணீர் தருவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற பிரச்சனைகள் பல்வேறு கட்டங்கள் மூலமாக பேசி சரி செய்யப்பட வேண்டும். இருந்தாலும் எனது தரப்பில் இருந்து அவரை பார்க்கும்போது எனது வேண்டுகோளை வைத்தேன் என்றார்.
நீங்கள் பாரத்தின் எம்பி ஆ இந்தியாவின் எம்பி யா என்ற கேள்விக்கு?
நீங்கள் எதனுடைய நிருபர்களோ,எதனுடைய மக்களோ,அதனுடைய எம்பி தான் நான் என்றார். பாரத் என்று பெயர் மாற்றும் விவகாரத்தில் மோடி ஏன் இவ்வளவு அவசரப்படுகிறார் என தெரியவில்லை. பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது கூட பெயர் மாற்றலாமே? அதை நாங்கள் எதிர்த்தாலும் வெளிநடப்பு செய்தாலும் பல சட்டங்களைக் கொண்டு வந்து கொண்டு தான் இருக்கின்றனர் பிஜேபி அரசு. அதேபோல இந்த பெயரை கொண்டு வரட்டும் நாங்கள் எதிர்க்கிறோமா ஆதரிக்கிறோமா? யார் எதிர்கின்றனர், யார் ஆதரிக்கின்றனர் என்பதை வாக்கெடுப்பு நடத்தி சட்ட ரீதியாக திருத்தம் கொண்டு வர வேண்டும். அதை ஒரு பலகையில் எழுதி வைத்து விட்டால் மட்டும் போதுமா? அரசியல் சட்டத்திலேயே இந்தியா பாரத் என்று அழைக்கப்படலாம் என இருக்கிறது. பாரத் என்கிற இந்தியா என்று மாற்றினால் கூட சட்ட ரீதியாக மாற்ற வேண்டும். இந்திரா காந்தி பிரதமராக இருக்கும் போது கூட1976ல் இந்திய மதச்சார்பற்ற நாடு என்று வரவேண்டும் என்பதற்காக, பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வந்து அரசியல் சட்டத்தில் சோசியலிஸ்ட் அண்ட் ரிபப்ளிக் இந்தியா என மாற்றம் கொண்டு வந்தார். அதை விட்டுவிட்டு நேற்று நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் முன்னாள் பாரத் என்று பெயர் வைத்திருக்கிறார் மோடி. எனவே வருபவர்கள் இந்தியாவின் பிரதமர் எங்கிருக்கிறார் என்று தேடுவார்கள். சட்டத்தில் திருத்த வேண்டும். அனாவசிய குழப்பத்தை தரக்கூடாது. முறையாக செய்ய வேண்டும். எதையும் அவசரக்கோலத்தில் செய்யாமல் ஆலோசித்து நிதானமாக செய்ய வேண்டும்.
இந்திய அரசியல் சட்டத்தை அம்பேத்கர் ஒரே இரவிலா கொண்டு வந்தார்? மாதக்கணக்கில் அனைத்து பெரிய அறிஞர்களும் பேசி, ஆலோசித்து மாற்றங்கள் கொண்டு வந்து தொகுதி வாரியாக கொண்டு வந்து, பின்னர் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. எனவே மாற்றம் என்பது ஒரே இரவில் கொண்டு வரக்கூடியது அல்ல. பல்வேறு மாநிலங்களில் மாநில ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு வருடங்களோ இரு வருடங்களோ ஆகின்றது அந்த வகையில் ஒரே தேர்தல் ஒரே நாடு என்ற விஷயத்தை எப்படி கொண்டு வருவார்கள்?? இவை அனைத்தையும் கலைத்துவிட்டு கொண்டு வருவார்களா?? நீதிமன்றத்தை தலையிட விடுவார்களா? மாநில அரசுகள், கட்சியினரை கேட்காமல் அவ்வளவு சீக்கிரத்தில் அதை செய்ய முடியுமா என்பது சந்தேகத்துக்குரியது. ஆனால் மோடி சர்வாதிகாரி போன்று செயல்பட்டு என்ன வேண்டுமானாலும் செய்வார். எனவே ஜனநாயகத்துக்கு உட்பட்டு அதை முறையாக நிறைவேற்ற முடியுமா என்பதில் சந்தேகம் இருக்கிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது அவ்வளவு எளிதில் நடக்கக் கூடிய விஷயம் அல்ல. இதுகுறித்து பாராளுமன்றம் அவசரமாக கூட்டப்பட்டது. இது எங்கேயுமே நடந்தது அல்ல. பொதுவாக பாராளுமன்ற கூட்டம் நவம்பர் மாதம் தான் நடக்கும். இது ஒரு அவசரம் கூட்டம் போல் கூட்டி இருப்பது ஏன் என சோனியா காந்தி அம்மையார் கூட கேட்டுள்ளார். இதுவரை எதுவும் சொல்லவில்லை. மோடி எதையும் ராத்திரியுடன் , ராத்திரியாக அறிவிக்கக் கூடியவர். ஏற்கனவே 1000 ரூபாய் நோட்டு செல்லாத விவகாரத்தில் கூட இரவு தான் அறிவித்தார். ஆனால் கொள்கைப்படி பார்த்தால் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியமல்ல.
தமிழ்நாட்டை பொறுத்தவரையில் பெரியார் என்ன கருத்து வைத்திருந்தாரோ, அண்ணா என்ன கருத்து வைத்திருந்தாரோ அதுதான் நமது கருத்து. தமிழ்நாடு ஒரு மதசார்பற்ற, ஜாதி வித்தியாசம் பார்க்காத ஒரு மாநிலம். சனாதனம் என்பது பிறப்பால் அனைவரும் சமம் என்பது தானே. இந்து மதத்தைப் பற்றி உதயநிதி எதுவுமே பேசவில்லையே.. சாமியைப் பற்றி ஏதாவது பேசி உள்ளாரா? பிள்ளையாரை பற்றி பேசினாரா? முனிசாமியை பத்தி பேசினாரா? சாமியைப் பற்றி பேசவில்லையே. பெரியாருடைய கொள்கையை பற்றி தான் பேசினார். உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்பது கிடையாது என்ற கொள்கையை பற்றி தான் உதயநிதி பேசினார். அண்ணா ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூறினார். எனவே திமுக கொள்கை ரீதியாக, சிலவற்றை கடைப்பிடித்து வருகின்றனர். எல்லாருமே கொள்கை ரீதியான விஷயங்களை தான் கடைப்பிடித்து வருகிறோம். அதை விட்டுவிட்டு ஒரு சாமியார் மடத்தனமாக அறிவித்து இருக்கிறார். எனவே உதயநிதி பேசியதில் ஒன்றுமே இல்லை. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை எந்த சாமியை வேண்டுமானாலும் கும்பிடலாம் தப்பில்லை. சென்ற வாரம் வேளாங்கண்ணி போயிருந்தேன். பின் நாகூர் சென்றேன். பின்னர் கும்பகோணம் சென்றேன். எல்லா தெய்வங்களையும் தரிசித்து விட்டு வந்தேன். எனவே யார் வேண்டுமானாலும் எந்த தெய்வத்தை வேண்டுமானாலும் வணங்கலாம் பிரச்சனை இல்லை என்றார்.