திருச்சி மாநகராட்சியை மேம்படுத்த வேண்டும் சிறந்த மாநகராட்சியாக உயர்த்த வேண்டும் என்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக குப்பைகளை தரம் பிரித்தல், தூய்மையாக சுற்றுச்சூழலை பாதுகாத்தல், சாலைகளை மேம்படுத்துதல், வண்ண விளக்குகள் அமைத்தல் என்று பல சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தபட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த  2022-ம் ஆண்டு ஜூன் மாதம் மாமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2022- 2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளிலும் தலா ரூ.10 லட்சம் மதிப்பில் பொது நிதியிலிருந்து வார்டு அலுவலகம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதன்பின், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மாமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2023- 2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளிலும் தலா ரூ.25 லட்சம் மதிப்பில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து பன்நோக்கு அலுவலகம் கட்டப்படும் என அறிவிப்பு வெளியானது. இந்த அலுவலகத்தில், கவுன்சிலர் அறை, துப்புரவு மேற்பார்வையாளர் அறை, ஸ்டோர் ரூம், கழிப்பறை போன்றவை கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டது. தங்களது கோரிக்கைகள் தொடர்பாக கவுன்சிலர்களை சந்திக்க இந்த அலுவலகங்கள் உதவிகரமாக இருக்கும் என்பதால் இத்திட்டத்தை பொதுமக்கள் வரவேற்றனர். 




மேலும் ஓராண்டாகியும் இன்னும் இத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இந்நிலையில், அடுத்த நிதியாண்டுக்கான மாநகராட்சியின் பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டிலாவது இந்தத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா என கவுன்சிலர்களும், பொதுமக்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதுக்குறித்து பொதுமக்களிடம் கேட்டபோது,  65 வார்டு அலுவலகங்கள் அமைக்கபடும் என்ற அறிவிப்பில் தாமதம் ஏற்படுவது,பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது (பல்நோக்கு அலுவலகத் திட்டம்) ஒரு நல்ல முன்மொழிவாகும். மேலும் ஒரு வருடத்திற்குள் திட்டத்தை முடிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் சில காரணங்களை முன்வைத்து இந்த திட்டததை தாமதம் படுத்த கூடாது என்றனர்.  மேலும், இத்திட்டத்தை செயல்படுத்துவதில் மேலும் காலதாமதம் ஏற்படுவதை தவிர்க்கவும், விரைவில் கட்டுமான பணிகளை துவக்க நடவடிக்கை எடுக்கவும் மாநகராட்சியை கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்தனர்.




மேலும் வார்டு அலுவலகம் இருந்தால் பொதுமக்கள் தங்களது பிரச்சினைகள் தொடர்பாக கவுன்சிலர்களை சந்திக்க ஏதுவாக இருக்கும். ஆனால், இதற்கு முன்னுரிமை கொடுக்காமல் ஆடம்பர, அலங்கார விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து மாநகராட்சி நிர்வாகம் நிறைய செலவு செய்கிறது. ஒவ்வொரு ஆண்டும் வெறும் அறிவிப்புடன் மட்டுமே இத்திட்டம் உள்ளது. மேலும் 65 வார்டு அலுவலகம் கட்டப்பட்டால், கவுன்சிலர் அங்கு இல்லை என்றாலும், பொதுமக்கள் தங்களது குறைகளை அங்குள்ள புகார் பதிவு புத்தகத்தில் பதிவு செய்துவிட்டு செல்ல முடியும். எனவே, இந்த ஆண்டாவது இத்திட்டத்தை நிறைவேற்ற மாநகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இதுகுறித்து திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் அவர்களிடம்  கேட்டபோது கூறியது.. சில பிரச்சினைகளால் வார்டு அலுவலகம் கட்டும் திட்டத்தை செயல்படுத்துவது தள்ளிப்போனது. மேலும் வார்டு அலுவலகம் அமைபதற்கான இடங்களை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் முடிந்த உடன், வார்டு அலுவலகம் கட்டும் திட்டத்தின் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள விரைவில் டெண்டர் அறிவிக்கபட உள்ளதாக தெரிவித்தார்.