திருச்சி மாவட்டத்தில் சத்திரம் பேருந்து நிலையம் முக்கியமானதாகும். ஏன் என்றால் வரலாற்று சிறப்புமிக்க மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம், கல்லூரிகள், போன்ற பல சுற்றுலா தலங்களுக்கு மையமாக இங்க இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து மாநகர முழுவதும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கரூர், அரியலூர், பெரம்பலூர், சென்னை போன்ற பகுதிகளுக்கு இங்கிருந்து அதிக அளவில் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. அதுமட்டும் அல்லாமல் சுற்றுலாத் தலங்களான முக்கொம்பு, காவேரி ஆறு, மலைக்கோட்டை, கல்லணை, ஸ்ரீரங்கம், போன்ற பல்வேறு பகுதிகளுக்கு தொடர்ச்சியாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் நகர பேருந்து, புறநகர் பேருந்துகள் என அதிக அளவில் வந்து செல்வதால் அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து ஏற்பட்டு வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமபட்டு வந்தனர். ஆகையால் இப்பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சீர்செய்ய வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில் திருச்சி மாநகரின் வளர்ச்சி மற்றும் மக்கள் தொகை பெருக்கத்தை கருத்தில் கொண்டு 1,1852 சதுர மீட்டர் பரப்பளவில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இப்பகுதியில் கல்லூரிகள், பள்ளிகள் அதிக அளவில் இருப்பதால் 651 அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நாளொன்றுக்கு 5382 தடவை வந்து செல்கின்றன. மேலும் புறநகர் பேருந்துகள் 222 எண்ணிக்கையில் 563 தடவை வந்து செல்கின்றது. ஆகையால் இப்பகுதி போக்குவரத்து மிகுந்த பகுதியாக காணப்பட்டது. இதனை தொடர்ந்து இப்பேருந்து நிலையத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 28.24 கோடியில் அதிநவீன வடிவமைப்புடன் மேம்படுத்தும் பணி கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி கடந்த ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி முடிக்கபட்டது. மேலும் பேருந்து நிலையத்தின் கீழ்த்தளத்தில் 1891.45 சதுர மீட்டரில் 350 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் பேருந்து நிலைய முனையம் 1-ன் மொத்த பரப்பளவு 7029.08 சதுரமீட்டர் ஆகும். பேருந்து நிறுத்தும் தடங்களின் எண்ணிக்கை 14 எண்கள், இதில் நகரபேருந்து, புறநகர பேருந்துகளுக்கு ஒதுக்கபட்டுள்ளது. மேலும் முனையம் ஒன்றில் தரைதளம், நேரங்காப்பாளர் அறை, காவல்துறை கண்காணிப்பு, மின்சாரம் கட்டுபாடு, ஜெனரேட்டர் அறைகள் என அமைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து முனையம் இரண்டின் மொத்த பரப்பளவு 7298.06 சதுரமீட்டர் ஆகும். பேருந்து நிறுத்தும் தடங்களின் எண்ணிக்கை 15 எண்கள், இதில் நகரபேருந்து, புறநகர பேருந்துகளுக்கு ஒதுக்கபட்டுள்ளது. தரைதளத்தில் 54 கட்டிட கடைகள், பயணிகள் காத்திருப்போர் அறை, தாய்மாரிகள் பாலூட்டும் அறை அமைக்கபட்டுள்ளது. அதேபோல் முதல் தளத்தில் உணவு பொருட்கள் பாதுகாப்பு அறை, பயணசீட்டு முபதிவு அறை, தீ தடுப்பு பாதுகாப்பு அறை, கண்காணிப்பு கேமிரா/ ஒலி பெருக்கி அறை மற்றும் ஓட்டுநர், நடத்துனர் அறைகள் அமைக்கபட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்தை கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து சில பணிகள் நடைபெற்று வந்த நிலையில் நேற்று முற்றிலுமாக அனைத்து பணிகளும் முடிக்கபட்டது. இந்நிலையில் இன்று முதல் மக்கள் பயண்பாட்டிற்க்கு சத்திரம் பேருந்து நிலையத்தை தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு, பள்ளிகல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.