திருச்சி மாவட்டத்தில் 'கூடை பூந்தி' பிரபலமான இனிப்பு வகையாக அறியப்பட்டு வருகிறது. இந்த வகை பூந்தி வழக்கமான அளவில் இல்லாமல் சற்று பெரியதாகவும், அதுவும் முழுக்க முழுக்க நெய்யிலேயே தயாரிக்கப்பட்டதாகவும் இருப்பதுடன் அழகான மூங்கிலில் செய்யப்பட்ட கூடையில் வைத்து கொடுக்கும்போது அதை வாங்குபவர்களின் நாவிற்கு மட்டுமில்லாது கண்களுக்கும் விருந்தளிக்கும் உணர்வை இது ஏற்படுத்துகிறது. 1916ஆம் ஆண்டு நடேசன் பிள்ளை என்பவர் திருச்சி பெரிய கடை வீதியில் ஒரு பலகார கடையைத் தொடங்கினார். பலகாரம் என்றாலே பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்புவர். என்றாலும் அத்தகைய கடைக்கு முதலில் பெயர் வைப்பது பற்றி தான் அனைவரும் சிந்திப்பர். அத்தகைய பெயர் வித்தியாசமானதாகவும், அனைவர் நினைவிலும் இருக்கும் வகையிலும் வைத்தால் நன்றாக இருக்கும் என்று அவருக்கு தோன்றிய யோசனையினால் வந்தது தான் இந்த 'யானை மார்க் நெய் மிட்டாய் கடை'. இந்த கடையானது வழக்கமான இனிப்பு கார வகைகள் உடன் தொடங்கப்பட்டது என்றாலும், பலகாரத்தில் ஏதாவது புதுமையைக் கொண்டு வர வேண்டும், அது சுவையாகவும், அனைவரையும் ஈர்க்கும் வகையிலும் இருக்க வேண்டும் என்று நினைத்து 'நடேசன் பிள்ளை' மனதில் தோன்றியது தான் இந்த பெரிய பூந்தி. அதை நெய்யிலேயே செய்து சுவையாக மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதை நினைவில் கொண்டு இந்த பெரிய பூந்தியை தயாரித்து விற்க ஆரம்பித்தார் நடேசன் பிள்ளை.




மேலும் கடைகளில் வழக்கமாக கிடைக்கும் பூந்தியை போன்று அல்லாமல் சற்று பெரிய அளவிலும் அதுவும் முழுக்க முழுக்க நெய்யில் செய்து கொடுத்தால் அது யாருக்குத்தான் பிடிக்காது? ..அதன் சுவை பிடித்துப் போக கூட்டம் கூட்டமாக மக்கள் இந்த பூந்தியை வாங்கி செல்கின்றனர். அப்படி பேமஸ் ஆனது தான் இந்த கூடை பூந்தி.   தனது தாத்தா நடேசன் பிள்ளை ஆரம்பித்த இந்த கடையை அவருக்குப் பிறகு அவரது மகன் நடத்திவந்தார். தற்போது அவர் மகன்கள் கண்ணன் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இந்த கடையை பற்றி கேட்டபோது, தனது தாத்தா அந்த காலத்தில் ஆரம்பித்த இந்த கடையின் கூடை பூந்தி சுவை மாறாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே அதேபோன்று சுவையில் தொடர்ந்து வழங்கி வருவதாக தெரிவித்தனர். இந்த பூந்தி செய்வதற்கு தேவையான நெய் வீட்டிலேயே தயாரிப்பதாகவும், அரிசி மாவு, கடலை மாவு போன்றவற்றை சேர்த்து பெரிய அளவில் இந்த பூந்தி தயாரிக்கப் படுகிறது என்றும் அவர்கள் கூறினர்.




அதுமட்டுமல்லாமல், முன்னாள் முதல்வர் காமராஜர், கருணாநிதி தொடங்கி தற்போதைய அரசியல்வாதிகள் வைகோ வரை இந்த கூடை பூந்தியை சுவைக்காத பிரபலங்களே இல்லை என்று கூறினர். அதுமட்டுமின்றி தினமும் 100 கிலோ பூந்தி தயாரிப்பதாகவும், அவை அனைத்தும் விற்பனை ஆகி விடும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். அது மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்தும் இந்த பூந்தியை வாங்கி செல்வதாகவும், வெளிநாடுகளுக்கும் சிலர் பூந்தியை வாங்கி செல்வதாகவும் அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.  நாளுக்கு நாள் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அதிகமாக அதிகமாக வேறு கிளைகள் ஆரம்பிக்கலாமே? என்று பலர் கூறிய போதிலும் வேறு வேறு கிளைகள் தொடங்கும் போது பணம் மட்டுமே நோக்கமாக இருக்கும். ஆனால் மக்களுடன் இருக்கும் அந்த தொடர்பு குறைந்து விடக்கூடாது என்பதினாலேயே இந்த கடையை இங்கேயே தொடரலாம் என்று முடிவு எடுத்துள்ளதாக அவர்கள் கூறி முடித்தனர்.