தஞ்சாவூர்: என்னது... அப்படியா? என்னங்க சொல்றீங்க... இதுதான் திருச்சியில் நண்பர்கள், உறவினர்கள், பொதுமக்கள் பார்த்துக் கொள்ளும் இடத்தில் பேசும் முக்கிய விஷயமாக ஒன்று இருக்கிறது. என்ன தெரியுங்களா? அதுதான் மத்திய பேருந்து நிலையம். ஏன் அதுக்கு என்ன என்று கேட்கிறீர்களா? வாங்க பார்ப்போம்.
தமிழகத்தில் திருச்சி மாவட்டம் மிகவும் முக்கியமான மாவட்டமாக இருந்து வருகிறது. மிகப்பெரிய வர்த்தகப்பகுதியாக திருச்சி விளங்கி வருகிறது. சென்னைக்கு பின்னர் பல்வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் வேலைத் தேடி வருவது திருச்சிக்குதான். எந்நேரமும் மிகவும் பரபரப்புடன் காணப்படும் திருச்சியில் மத்திய பேருந்து நிலையத்தை தெரியாதவர்களே இருக்க முடியாது. இந்த மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஏராளமான பேருந்துகள் வெளியூர்களுக்கு தற்போது இயக்கப்பட்டு வருகிறது. சென்னை, தஞ்சாவூர், நாமக்கல், புதுக்கோட்டை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், மதுரை, வேளாங்கண்ணி, நாகை, திருவாரூர், கும்பகோணம் என்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் மத்திய பேருந்து நிலையம் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட வண்ணம் உள்ளது.
இதற்கு மாற்று ஏற்பாடாக பஞ்சப்பூரில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் பேருந்து முனையமானது கட்டப்பட்டு வருகிறது. அது தெரிந்த விஷயம் தானே என்று நீங்கள் நினைக்கலாம். இருங்க அவசரமே படாதீங்க... பஞ்சப்பூரில் பிரமாண்டமாக பேருந்து முனையம் கட்டப்படும் போது மத்திய பேருந்து நிலையத்தின் கதி? ஹா... இதுதான் விஷயமோ. கடந்த சிலநாட்களாக சமூக வலைதளங்களில் மத்திய பேருந்து நிலையம் அம்புட்டுதான். இடிச்சுட்டு வணிக வளாகமாக மாற்ற இருக்காங்கோ என்று தகவல் பரவ... மக்கள் மத்தியில் செம ஜர்க். என்னடா இது இப்படி ஆயிடுச்சே மத்திய பேருந்துநிலையத்தின் கதி என்று பார்ப்பவர்கள் எல்லாம் வருத்தப்பட்டு பேசும் விஷயமாக மாறியது.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தற்போது சுமார் 2245 பேருந்துகள் தினசரி இயக்கப்பட்டு வருகிறது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் திருச்சி மாவட்டத்தின் அடையாளமாக தற்போது திகழ்ந்து வருகிறது. இதனை வணிகவளாகமாக மாற்றப்படும் என்ற தகவல் திருச்சி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இதுஒரு புறம் இருக்க திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த பேருந்து முனையத்தில் அடிப்படை வசதிகள் அனைத்தையும் தரமாக அமைக்க வேண்டும் என அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் இந்த பணிகள் அனைத்தும் முடிவுற்று மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். சென்னை கிளாம்பாக்கத்தில் உள்ள பேருந்து நிலையத்திற்கே டப் கொடுக்கும் வகையில் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில்தான் திருச்சி மத்திய பேருந்து நிலையம் தொடர்பாக வெளியாக செய்திகளுக்கு அமைச்சர் நேரு கூறுகையில், திருச்சி மத்திய பேருந்து நிலையத்தை அகற்றி அந்த இடத்தில் வணிக வளாகம் கட்டப்படும் என தகவல்கள் வெளியாகி இருந்தது. திருச்சி மத்திய பேருந்து நிலையத்தை ஒருபோதும் அகற்ற மாட்டோம். எப்போதும் போல் வழக்கமாக மக்கள் பயன்பாட்டிற்கு பேருந்து நிலையம் செயல்படும் என்றார்.
அமைச்சர் கூறிய பின்னரே திருச்சி மக்கள் ஆசுவாசம் அடைந்துள்ளனர். மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் மத்திய பேருந்து நிலையம் மிகவும் முக்கியமான பேருந்து நிலையமாக செயல்பட்டு வருகிறது. பஞ்சப்பூர் பேருந்து நிலையம் திறக்கப்பட்டாலும் மத்திய பேருந்து நிலையம் செயல்பாட்டில் இருக்கும் என அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.