தஞ்சாவூர்: ஆமை வேகத்தில் நடந்து வரும் திருச்சி மெமு பணிமனை கட்டுமானப்பணிகளை விரைவுப்படுத்துங்கள். இதனால் திருச்சி பகுதியை சேர்ந்த மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற கோரிக்கை குரல் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. எல்லாம் சரி மெமு என்றால் என்ன? இதன் பணிமனையின் பணிகளின் தற்போதைய நிலை என்ன... வாங்க பார்க்கலாம்.

Continues below advertisement


மெமு என்பது, 'மெயின்லைன் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட்' (Mainline Electric Multiple Unit) என்பதன் சுருக்கம். சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய முக்கிய நகரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்களின் சிறப்பை அடிப்படையாகக் கொண்டே 'மெமு' ரயில்கள் உருவாக்கப்பட்டன. மின்சார ரயில்கள் அதிகபட்சம் 90 கி.மீ. தூரத்திற்கு இயக்கப்படுகின்றன. மின்சார ரயில்களின் வழக்கமான வேகத்தைவிட 10 கி.மீ. அதிகபட்சமாக மெமு ரயில்கள் இயக்கப்படும்.



இந்திய ரயில்வே துறை சார்பில் ரயில்வே வழித்தடங்கள் அனைத்தும் பல்வேறு பகுதிகளில் மின்மயமாக்கப்பட்டு வருகிறது. திருச்சி ரயில்வே கோட்டத்தில் திரூவாரூர்-காரைக்குடி வழித்தடத்தில் 149 கிலோ மீட்டர் தூரத்துக்கு 72 கோடி ரூபாய் செலவிலும், திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி வழித்தடத்தில் 39 கிமீ தூரத்துக்கு 23 கோடி ரூபாய் செலவிலும் இதேபோன்று பல்வேறு பகுதிகளில் மின்மயமாக்கும் பணிகள் அனைத்தும் நடைபெற்று தற்போது பயன்பாட்டில் இருந்து வருகிறது.


திருச்சி ரயில்வே கோட்டத்தில் இயக்கப்பட்டு வரும் டெமு ரயில்கள் அனைத்தும் மெமு ரயில்களாக கடந்த சில மாதங்களாக மாற்றப்பட்டு வருகிறது. இதுவரை திருச்சி ரயில்வே கோட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட ரயில்கள் மெமு ரயில்களாக மாற்றப்பட்டு பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள டெமு ரயில்களும் மெமு ரயில்களாக விரைவில் மாற்றப்படும் என ரயில்வே துறை அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெமு ரயில்கள் மின்சார இயக்கத்தில் செயல்படும், பிரதான பாதையிலுள்ள குறுகிய மற்றும் மிதமான தூர பயணங்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டவை. இவை பொதுவாக நகரங்களின் அருகிலுள்ள கிராமப்புறப் பகுதிகளை இணைக்கும் சிறிய தூர பயணங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன.


மெமு ரயிலுக்கு பராமரிப்பு முனையம் திருச்சியில் அமைக்கப்படும் என தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டது. அறிவிப்பு வெளியானதில் இருந்து நீண்ட நாட்களுக்கு பின் பணிகள் அனைத்தும் தொடங்கப்பட்டது. அதன்படி ரூ.50 கோடி ரூபாய் மதிப்பில் புதிய முனையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திருச்சி மாவட்டம் பொன்மலை மஞ்சத்திடலில் இடம் தேர்வு செய்யப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பின் பணிகள் அனைத்தும் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது இரும்பு தூண்கள் அமைக்கப்படும் பணியானது நடைபெற்றது. மெமு முனையம் பராமரிப்பு யார்ட்டில் ஒரே நேரத்தில் 16 ரேக்குகள் நிற்கும் அளவிற்கு பிட் லைன்கள் அமைக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுமானப்பணிகள் அனைத்தும் தனியார் நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.




இப்பணிகள் அனைத்தும் இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் பணிகள் அனைத்தும் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் ஜூலை மாதத்திற்கும் முடிக்கப்படுமா என்ற சந்தேகம் வலுவாக எழுந்துள்ளது. கட்டுமானப்பணிகள் அனைத்தும் முடிவடைந்து மெயின் லைனில் இருந்து முனையத்துக்கு வந்து செல்ல தண்டவாளம் ரயில்வே துறை சார்பில் அமைக்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த பராமரிப்பு முனையம் பயன்பாட்டுக்கு வரும் போது திருச்சி மற்றும் அதன் சுற்றி இருக்கக்கூடிய மக்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பணிகள் நடக்கும் வேகம் நத்தை ஊர்ந்து செல்வது போல் உள்ளது. வேகமான பயணத்திற்கு உதவும் ரயில்களின் பராமரிப்பு முனைய பணிகள் இப்படி மெதுவாக நடந்தால் எப்படிங்க? எனவே விரைந்து பணிகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


சரிங்க மெமு ரயிலில் என்ன வசதி இருக்கு. மெமு ரயிலைப் பொறுத்தவரை உட்காருவதற்கு மட்டுமன்றி நின்று செல்வதற்குத் தேவையான இடவசதியோடு இருக்கும். முன்பகுதியில் என்ஜின் அமைந்துள்ள ட்ராக்சன் கோச் தவிர, அடுத்தடுத்து ட்ரெயிலர் கோச் இருக்கும். இவை ஒவ்வொன்றிலும் சுமார் 100 பேர் வரை அமர்ந்து பயணிக்கலாம். அனைத்து பெட்டிகளிலும் உள்ளேயே நடந்து செல்லலாம்.