கர்நாடகாவில் உள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே இரண்டு வாரங்களுக்கு முன்பு கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டதால் மேட்டூர் அணையிலிருந்து அதிகபட்சமாக 2 லட்சம் கனஅடி உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டது. இதனால் திருச்சி மாவட்டத்தில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் ஒரு வாரத்துக்கும் மேலாக வெள்ள நீர் கரைபுரண்டு ஓடியது. இந்த வெள்ளப்பெருக்கினால் லால்குடி உள்ளிட்ட பகுதிகளில் வேளாண் நிலங்களில் வெள்ள நீர் புகுந்தது. மேலும் கல்லணை சாலையில் உள்ள உத்தமர்சீலி, திருவளர்ச்சோலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்த சாலை தரைப்பாலங்கள் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விவசாயிகளை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. இன்று காலை நிலவரப்படி 1 லட்சத்து 75 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. திருச்சி முக்கொம்பு மேலணைக்கு இன்று காலை 6 மணி அளவில் ஒரு லட்சத்து 95 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. இதில் 62 ஆயிரம் கன அடி நீர் காவிரியிலும், 1 லட்சம் 33 ஆயிரம் கனஅடி நீர் கொள்ளிடத்தில் திறந்து விடப்பட்டது. தற்போது தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருவதாக பொதுப்பணி துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
மேலும், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் முக்கொம்பு அணையில் இருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு மேலும் உயரும் என பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே காவிரி பாய்ந்து ஓடும் திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காவிரி கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் மீண்டும் மூட்டை முடிச்சுகளுடன் சிறப்பு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் முக்கொம்பு அணையில் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இந்நிலையில் திருச்சி காவிரி- முக்கொம்பு ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் கரையோரம் உள்ள மக்களை அப்புறபடுத்தும் பணியில் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறது. மேலும் திருச்சி மாவட்டத்திற்கு அபாய எச்சரிக்கை இதுவரை ஏற்படவில்லை ஆகையால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். இருந்தாலும் காவிரி கொள்ளிடம் ஆற்றங்கரையில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் ஆற்றில் இறங்குவோ, குளிக்கவும், துணி துவைக்கவோ மற்றும் கரையோரங்களில் நின்று புகைப்படம் எடுக்கவும் அனுமதி கிடையாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே அதிகாரிகள் சிறப்பாக செயலாற்ற முடியும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து இன்று தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என் . நேரு மற்றும் பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை அதிகாரிகள் முக்கொம்பு அணைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.