எங்கங்க வாகனத்தை நிறுத்துறது... திருச்சி பறவைகள் பூங்காவில் குவியும் மக்கள் புலம்பல் - தீர்வு என்ன?
பறவைகள் பூங்கா தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்கப்பட்டு இருக்கும். இதற்கு நுழைவு கட்டணம் பெரியவர்களுக்குரூ.200ம், குழந்தைகளுக்கு ரூ.150ம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: ஆரம்பிக்கப்பட்ட சில நாட்களிலேயே அமோக வரவேற்பை பெற்றுள்ள திருச்சி பறவைகள் பூங்காவிற்கு வரும் மக்களின் வாகனங்களை நிறுத்த பிரமாண்டமான இடம் தயாராகிவிடும் என்ற தகவல் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் சமீபத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மிகவும் பிரம்மாண்டமான பறவைகள் பூங்காவை திறந்து வைக்கப்பட்டது. திறக்கப்பட்ட சில நாட்களிலேயே இந்த பறவைகள் பூங்காதான் இப்போது ஹாட் ஆப் பிக்னிக் ஸ்பாட் ஆக மாறிவிட்டது. வார விடுமுறை தினங்கள் மற்றும் விழா நாட்களில் மக்களுக்கு மிகவும் தோதான குடும்பத்துடன் வந்து செல்ல செம பிக்னிக் ஸ்பாட் போல் மாறிவிட்டது இந்த பறவைகள் பூங்கா என்றால் மிகையில்லை.
Just In




திருச்சி மாவட்ட மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த பறவைகள் பூங்காவானது திறக்கப்பட்டதால் ஏராளமான மக்கள் இதனை கண்டு களித்து வருகின்றனர். இந்த பறவைகள் பூங்காவானது மிகவும் பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை பார்வையிடுவதற்காகவே தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.

இந்த பூங்கா திருச்சி - கரூர் சாலை கம்பரசம்பேட்டையில் அய்யாளம்மன் படித்துறை அருகே அமைக்கப்பட்டுள்ளது. கம்பரசம்பேட்டை ஊராட்சியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் ரூ.18.63 கோடி மதிப்பீட்டில், சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் பறவைகள் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான பணியை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பூங்காவிற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வந்து தற்போது திறக்கப்பட்டுள்ளது.
பறவைகள் பூங்காவில் இயற்கையான சூழ்நிலையில் 40க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பறவை இனங்கள், வெளிநாட்டுப் புறாக்கள், வாத்துகள், மீன் இனங்கள், பாம்புகள், ஈமு கோழிகள், முயல்கள் உள்ளது. பார்வையாளர்களை கவரும் வகையில் பூங்கா அழகாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. பறவைகள் மத்தியில் நடக்கக்கூடிய ஒரு புதிய அனுபவத்தை மக்களுக்கு வழங்கும் வகையில் உள்ளது
பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் சுமார் 50 பேர் அமர்ந்து அறிவியல் பூர்வ படங்களை பார்க்கும் வகையில் 7 d மினி தியேட்டர் உருவாக்கப்பட்டுள்ளது. முதியோர், பொதுமக்கள் இளைப்பாறும் வகையில் நிழல் அமைவிடங்கள் உள்ளது. இதனால் திறக்கப்பட்ட சில நாட்களிலேயே இந்த பூங்கா திருச்சி மக்கள் மனதில் தனியிடத்தை பிடித்து விட்டது.
இந்த பூங்காவிற்கு வருபவர்கள் தங்களின் சொந்த வாகனங்களில் வருவதால் அதனை நிறுத்துவதற்கு உரிய வசதி இல்லை என்று புகார் தெரிவித்து வந்த வண்ணம் இருந்தனர். மேலும் அவர்களுக்காக அய்யாளம்மன் படித்துறை பகுதி அருகே 200 கார்களை நிறுத்தும் வகையில் தற்காலிக பார்க்கிங் வசதியானது செய்யப்பட்டிருந்தது. இவ்வாறு இருக்கும் நிலையில் இந்த பறவைகள் பூங்காவுக்கு நிரந்தர பார்க்கிங் வசதி தேவை என பொதுமக்கள் அனைவரும் திருச்சி மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்து வந்த வண்ணம் இருந்தனர்.
தற்போது இந்த பறவைகள் பூங்காவுக்கு எதிரே பொதுப்பணித்துறை சார்பில் இருக்கக்கூடிய நிலத்தை கையகப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் ஒப்பந்த அடிப்படையில் 99 ஆண்டுகளுக்கு குத்தகை எடுத்து பராமரித்து வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் கடந்த ஆண்டுக்கான குத்தகை பணம் செலுத்தப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே குத்தகை விதிமுறைகளை மீறியதன் காரணத்திற்காக இந்த நிலத்திற்கான குத்தகையை ரத்து செய்து அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறுகையில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலத்தை இன்னும் 7 நாட்களுக்குள் மீட்கப்பட்டு அங்கு பறவைகள் பூங்காவுக்கான நிரந்தர வாகன நிற்கும் இட வசதி செய்து கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி வார விடுமுறை நாட்களில் கம்பரசம்பேட்டை களை கட்டும். இந்த பறவைகள் பூங்கா தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்கப்பட்டு இருக்கும். இதற்கு நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.200ம், குழந்தைகளுக்கு ரூ.150ம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.