திருச்சி விமான நிலையத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் தங்கம் கடத்தி வருவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை சுங்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.


இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது, 3 ஆண் பயணிகள் தங்களது லேப்டாப்பில் மறைத்து வைத்து எடுத்து வந்த தங்க தகடுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


மேலும் அவர்களிடமிருந்து தங்க கட்டி மற்றும் தங்க சங்கிலி ஆகியவற்றையும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் எடை 390 கிராம் அவற்றின் இந்திய ரூபாய் மதிப்பு 26 லட்சம் ஆகும்.




திருச்சி விமான நிலையம் கடத்தல் கூடாரமாக மாறுகிறது.. 


கடந்த 2 நாட்களுக்கு முன்பு துபாயில் இருந்து கொழும்பு வழியாக திருச்சி வந்த UL 131 விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.


அப்போது பயணி ஒருவர் தான் எடுத்து வந்த 3 லக்கேஜ் டிராலி பையின் உட்பகுதியில் தங்கத்தை வயர் வடிவில் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பைகளில் இருந்து ரூ.43 லட்சத்து 16 ஆயிரம் மதிப்புள்ள 600 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து அந்த நபரை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருச்சி விமான நிலையத்தில் நாள்தோறும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் இடையே இருந்து, பல லட்சம் ரூபாய் மதிப்புடைய தங்கம், வெளிநாட்டு பணம் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.


திருச்சி விமான நிலையத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்கம் கடத்தல் சம்பவம் அதிகரித்துள்ளது. இதனால் திருச்சி விமான நிலையம் கடத்தல் கூடாரமாக மாறிக்கொண்டே இருக்கிறது.




இந்த சம்பவம் குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியது..


சுங்கத்துறை அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாமல் ஒரு பிட் தங்கத்தைக்கூட கடத்திவர முடியாது. ஆனால், திருச்சி விமான நிலையத்தில் கிலோ கணக்கில் தங்கத்தைக் கடத்திவருகிறார்கள். இது எப்படிச் சாத்தியம் என கேள்வி எழுப்பினர்.


மேலும் பல சிறப்புகளைக்கொண்ட விமான நிலையம், தற்போது தங்கம் கடத்திவரும் கூடாரமாக மாறியிருக்கிறது. திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானச் சேவைகள் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஒவ்வொரு விமான நிலையத்திலும் அதிநுட்பமான ஸ்கேனர் இருக்கிறது. அது மனித உடலிலுள்ள நரம்புகள் முதல் தசைகள் வரையிலும் ஸ்கேன் செய்யும் வல்லமைகொண்டது.


ஆனால், இங்கு கிலோ கணக்கில் தங்கம் சர்வ சாதாரணமாக வெளியே வருகிறது என்றால் எப்படிச் சாத்தியம்? கஸ்டம்ஸ் அதிகாரிகளின் தொடர்பு இல்லாமல் கடத்தல் தங்கம் வெளியே வர வாய்ப்பே இல்லை. இதுவும் பிரச்னைகள் நடந்த பிறகுதான் நமக்குத் தெரியவருகிறது.


இதுபோல் எத்தனை கிலோ தங்கம் வெளியே சென்றது என்று தெரியவில்லை. தங்கத்தைக் கடத்தி வருவதற்குத் திருச்சியில் பெரிய நெட்வொர்க் இருக்கிறது என தெரிவித்தனர்.