திருச்சியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.


இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் பொழுது கட்டிடங்களை ஆய்வு மேற்கொள்வது என்பது வழக்கமான ஒன்று. ஏற்கனவே ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.  நானும் ஒரு பள்ளிக்கு சென்று மாணவர்களுக்கு புத்தகம் வழங்க உள்ளேன். பள்ளிக்கு வருகின்ற மாணவச் செல்வங்களை வருக, வருக என மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.


தமிழக முதல்வரின் சார்பாக மகிழ்ச்சியான கற்றலை உருவாக்குவோம், கற்பித்தலும் மகிழ்ச்சியாக இருக்கும். தேர்தல் நடத்தை விதிகளுக்கு பிறகு பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் பள்ளிகள் தயார் நிலையில் இருப்பது குறித்து கூட்டம் நடத்தப்பட்டது. தேர்தலுக்குப் பிறகு பள்ளிக்கூடங்கள் இயங்குவதற்கான இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.


கல்வி என்பது தரமான கல்வி, அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும், அதுவே மகிழ்ச்சிகரமான சமுதாயத்தை உருவாக்கும் என்பதை பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பொழுது உணர்ந்துள்ளோம். விரைவில் வெளிநாடுகளைப் போல் தொழில்நுட்ப மேம்பாடுகள் கொண்டுவரப்படும்.


ஏற்கனவே 20,000 பள்ளிகளுக்கு ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் கொண்டுவரப்பட்டுள்ளது. மீதமுள்ள 17,000 பள்ளிகளுக்கும் ஸ்மார்ட் வகுப்பறைகள் இந்த மாத இறுதிக்குள் கொண்டுவரப்படும். 




தமிழ்நாடு கல்வியில் பிற நாடுகளுடன் போட்டி போடுகிறது - அமைச்சர் அன்பில் மகேஷ்


நாம் போட்டி போடுவது பிற மாநிலங்களோடு அல்ல, பிற நாடுகளுடன், அப்படி தமிழகத்தில் கல்வி அடுத்த கட்டத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. நீட் தேர்வு என்று வரும் பொழுது, அது சுகாதாரத்துறை தான் பதில் சொல்ல வேண்டும். எனினும் பள்ளி மாணவர்கள் தான் தேர்வு எழுதுகிறார்கள், இதை ஆரம்பத்தில் இருந்தே இந்தியா கூட்டணி தொடர்ந்து எதிர்த்து வருகிறது. நீட் தேர்வு இருக்கக்கூடாது அது ஏழை மாணவர்களை பழிவாங்க கூடிய ஒன்றாக இருக்கிறது. 


தலையில் உள்ள ஹேர்பின் முதல் மாணவர்களுக்கு சோதனை மேற்கொண்டனர். எங்களுடைய ஆட்சி என்பது பள்ளிக்கு வரக்கூடிய மாணவர்களுக்கு புது துணியை தர கூடியது, ஆனால் நீட் என்ற தேர்வில் கொடுத்த துணியை கிழக்கிறார்கள் என்பதை ஏற்கனவே ஆணித்தரமாக சொல்லி உள்ளோம்.


மகாராஷ்டிரா சிண்டே குளறுபடிகள் நடந்துள்ளதாக சொல்லி உள்ளார். எனவே இனிதான் ஆட்டம் உள்ளது. எனவே கண்டிப்பாக இந்த முறை நீட் தேர்வை ஒழிப்பதற்கு எல்லா விதத்திலும் போராடுவோம். இவ்வாறு தெரிவித்தார்.


முன்னதாக திருச்சி மாநகரில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பாக நடைபெற்ற கால்பந்து போட்டியை அமைச்சர் அன்பில் மகேஷ், திருச்சி எம்பி. துரை வைகோ மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.