திருச்சி புத்தூர் நால்ரோட்டைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் திலீப் (வயது 34). இவர் தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க திருச்சி மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். இவருக்கும் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திலீபன் திருச்சியில் இருந்து லால்குடிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, நெ.1 டோல்கேட் அடுத்து அகிலாண்டபுரம் அருகே வாகனம் சென்றுகொண்டிருந்தபோது 7 பேர் கொண்ட கும்பல் திலீபன் ஓட்டிச்சென்ற கார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொலை செய்ய முயன்றுள்ளனர். இதனைச் சுதாரித்துக்கொண்ட திலீபன், காரை நிறுத்தாமல் காருடன் சமயபுரம் காவல் நிலையத்திற்குச் சென்று தஞ்சமடைந்தார். இந்த சம்பவத்தால் கார் கண்ணாடி உடைந்தது. திலீப் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுபற்றி தகவல் அறிந்த திருச்சி மாவட்ட காவல் சூப்பிரண்டு சுஜித்குமார், லால்குடி துணை காவல் சூப்பிரண்டு சீதாராமன், சமயபுரம் காவல் ஆய்வாளர் பொன்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
இதுகுறித்து திலீப் கொடுத்த புகாரின்பேரில் சமயபுரம் காவல் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ், சப்- இன்ஸ்பெக்டர் வாசுதேவன் மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்களை காவல்துறையினர் தீவிரமாக விசாரனை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் நடந்த பகுதியில் உள்ள அமைக்கபட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் சந்தேகத்தின் அடிப்படையில் பலரிடம் தீவிரமாக விசாரனையை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக அகிலாண்டபுரம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பெருமாள் மகன் கோபால கிருஷ்ணன் (28), மாமுண்டி மகன் சுரேஷ் என்ற தாயுமானவன் (21), செந்தில்குமார் (42), ஸ்ரீரங்கம் கீழவாசல் ரெட்டியார் தெருவைச் சேர்ந்த சிதம்பரம் மகன் நந்தகுமார் (25), வினோத் என்ற ஹரிஹரன் (25) உள்ளிட்ட 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அவர்களிடம் இருந்து வெடிக்காத நாட்டு வெடிகுண்டு மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்குத் திருச்சி மாவட்ட எஸ்.பி சுஜித்குமார் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் முன் விரோதம் காரணமாக தாக்குதல் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது என காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்