திருச்சி மாநகரில் சாலைகளில் நடுவே கால்நடைகள் அதிகளவில் சுற்றி திரிவதால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக பொதுமக்கள் தொடர்ந்து மாநகராட்சிக்கு புகார் அளித்து வந்தனர். இந்நிலையில் திருச்சி- சென்னை நெடுஞ்சாலை, திருச்சி- தஞ்சாவூர் நெடுஞ்சாலை, திருச்சி- மதுரை நெடுஞ்சாலை, திருச்சி- கரூர் நெடுஞ்சாலை மற்றும் மாநகர பகுதிகளில் சத்திரம் பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம், வயலூர் சாலைப் பகுதி, பாலக்கரை பகுதி, தில்லை நகர் பகுதி, கருமண்டபம் பகுதி, மன்னார்புரம் ,உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கால்நடைகள் அதிக அளவில் சாலைகளில் சுற்றித் திரிகிறது என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து கால்நடைகளை வளர்ப்பவர்களுக்கு மாநகராட்சி சார்பாக ஏற்கனவே சில அறிவுரைகளை தெரிவிக்கப்பட்டு இருந்தது, அதாவது கால்நடைகளை வளர்ப்பவர்கள் பொதுமக்களுக்கு எந்தவிதமான இடையூறும் இல்லாத வகையிலும், சாலைகளில் சுற்றித்திரியாமல் வளர்க்க வேண்டும். மேலும் கால்நடைகளால் விபத்துக்கள் ஏற்பட்டால் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திருச்சி மாநகராட்சி ஆணையர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் திருச்சி மாவட்டம் அரியமங்கலம் பகுதியில் எந்நேரமும் கால்நடைகள் தேசிய நெடுஞ்சாலைகள், முக்கிய சாலைகள் மற்றும் தெரு பகுதிகளில் சுற்றி வருகின்றன. இதனை கால்நடை வளர்ப்பவர்கள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் நாள்தோறும் பல்வேறு விபத்துகளை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் அரியமங்கலம் அம்பிகாபுரம் பகுதியில் இன்று அதிகாலை நேரத்தில் அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று சாலையில் நின்று கொண்டிருந்த மாடுகள் மீது மோதியது. இதில் நான்கு மாடுகள் உயிரிழந்தது. மேலும் ஒரு மாட்டிற்கு கால் முறிந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளது. இறந்த மாடுகளின் சடலத்தை மாநகராட்சி பணியாளர்கள் மீட்டுச் சென்றனர்.மேலும் கால் முறிவு ஏற்பட்ட மாட்டிற்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மாநகராட்சிக்கு உட்பட்ட சாலைகளில் கால்நடைகள் சுற்றி திரிந்தால் கால்நடை வளர்ப்பவர்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் எனவும் மாடுகளை மூன்று நாட்களுக்குள் கால்நடையின் உரிமையாளர்கள் பத்தாயிரம் அபராதத்தை கட்டி கூட்டிச் செல்ல வேண்டும் இல்லையெனில் சந்தையில் விற்கப்பட்டு அந்தப் பணம் மாநகராட்சியின் கருவூலத்தில் சேர்க்கப்படும் என மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு இருந்த நிலையிலும் , அதனைப் பொருட்படுத்தாமல் கால்நடை வளர்ப்பவர்களின் அலட்சிய போக்கால் சாலையிலேயே மாடுகள் சுற்றி திரிவதால் இதுபோன்ற விபத்துகள் நடைபெற்று வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இதுபோன்று அசம்பாவிதங்கள் நடைபெறாமல் கால்நடை உரிமையாளர் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக மாவட்ட நிர்வாகம் கால்நடை வளர்ப்போர்களுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது, ஆனால் கால்நடை உரிமையாளர் அலச்சிய போக்கில் இருப்பதால் நடவடிக்கைகளை மேலும் கடுமையாக்கப்படும் என திருச்சி மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.