குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்க்கு திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, தென்காசி, தேனி, திண்டுக்கல், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும், மேலும் சென்னை, திருவள்ளூ,ர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, கரூர், நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.




இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை தமிழகம் முழுவதும் பெய்து வருவதால் அனைத்து நீர் நிலங்களும், ஏரிகள் உள்ளிட்ட அனைத்து வெகுவாக நிரம்பி வருகிறது. மேலும் திருச்சியை பொறுத்தவரை நேற்று மாலை முதல் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் திருச்சி மாவட்டம் துறையூர் பெரிய ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில், ஏரியின் மேற்கு கரை பலமில்லாமல் இருப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். துறையூர் பெரிய ஏரி சுமார் 285 ஏக்கர் பரப்பளவு உடையது. தமிழ்நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பெரிய ஏரிக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. வறட்சியால் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து விட்ட நிலையில், கடும் தண்ணீர் பஞ்சத்தை சந்தித்து வருகிற நகர மக்களுக்கு பெரிய ஏரி நிரம்புவதைக் கண்டு பொது மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடையந்துள்ளனர்.



மேலும் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் மக்கள் அச்சத்திலும் இருக்கிறார்கள். பெரிய ஏரியின் மேற்கு கரையில் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள மண் சரிவு காரணமாக கரை பலமிழந்திருப்பதால், பெரிய ஏரி நீர் கரையை அரித்துக் கொண்டு வெளியேறிவிடுமோ என்று  மக்களிடமும், ஏரி நீரை நம்பியுள்ள விவசாயிகள் மத்தியிலும் அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் மேற்கு கரை சேதமடைந்தால் அந்த கரையை குறுக்கு வழியாக பயன்படுத்தி துறையூருக்கு வந்து செல்கிற கோவிந்தபுரம், கிருஷ்ணபுரம் கிராம மக்களின் போக்குவரத்தும் தடைப்படும். அரசு துறை அதிகாரிகள் போர்க்கால நடவடிக்கையாக பெரிய ஏரிக்கரையை சீரமைத்து, பெரும் அசம்பாவிதங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தண்ணீர் தொடர்ந்து அதிக அளவில் வெளியேறுவதால் தெருக்கள், வீடுகளில் தண்ணீர் புகுந்து வருகிறது, எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.