கர்நாடக மாநிலத்தில் கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி உள்ளன. இதனால் உபரிநீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் மேட்டூர் அணை நிரம்பியுள்ளதால், தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றபட்டு வருகிறது. இதன் காரணமாக சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, கடலூர் ஆகிய 11 மாவட்டங்களில் உள்ள காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காவிரி ஆற்றில் முக்கொம்புவில் இருந்து காவிரி, கொள்ளிடம் ஆற்றில் 2 லட்சத்து 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றபட்டு வருகிறது.  இதனால் காவிரி, கொள்ளிடம் ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த ஆறுகளில் பொதுமக்கள் இறங்க வேண்டாம். முக்கொம்பு மற்றும் கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பாதை வழியாக யாரும் செல்ல வேண்டாம் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர்  பிரதீப்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் காவிரி ஆற்றில் அதிகளவில் தண்ணீர் வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையும் இணைந்து 24 மணி நேரமும் காவிரி கரையோரங்களில் பாதுகாப்பு பணியை முடுக்கி விட்டுள்ளனர்.




இந்நிலையில், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோர பகுதிகளில் உள்ள வயல்வெளியில் தண்ணீர் புகுந்து சேதத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து திருச்சி உத்தமர்சீலி பகுதியில் காவிரி கரையோரத்தில் உள்ள வாழை தோட்டங்களில் வெள்ளநீர் புகுந்தது. இதில் சுமார் 200 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழைக்கன்றுகள் தண்ணீரில் மூழ்கி நாசமாயின. மேலும் கிளிக்கூடு அருகே திருச்சி-கல்லணை சாலையில் உள்ள தரைப்பாலம் வெள்ளநீரில் மூழ்கியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து கல்லணை வழியாக தஞ்சாவூர், திருவையாறு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களை மாற்று வழியில் செல்ல, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அறிவுறுத்தினர். மேலும் இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப்பெருக்கினால் சுமார் 200 ஏக்கர் விளை நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழை மற்றும் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. தற்போது வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வருங்காலத்தில் இதுபோன்ற சேதங்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண