கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணைகளுக்கு வரக்கூடிய உபநீர் அனைத்தும் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து, அந்த அணை நிரம்பியது. இதையடுத்து அந்த அணைக்கு வரக்கூடிய உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு, வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் திருச்சி, கரூர் போன்ற மாவட்டங்களில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருச்சி மாவட்டம் முக்கொம்பு காவிரி ஆற்றில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி 24 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரி ஆற்றில் 20 ஆயிரம் கன அடி வீதமும், கொள்ளிடத்தில் 2,500 கன அடி வீதமும் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. மதிய நேரத்தில் காவிரி ஆற்றில் வரக்கூடிய தண்ணீரின் அளவு அதிகரிக்க தொடங்கியது. இந்த ஆற்றில் வரக்கூடிய தண்ணீர் முக்கொம்பு மேலணை மற்றும் கொள்ளிடம் ஆற்றின் வழியாக திறந்து விடப்படுகிறது. மேலும் காவிரி ஆற்றில் வரக்கூடிய தண்ணீர் நுங்கும், நுரையுமாக, அதிக இரைச்சலுடன் வெளியேறுகிறது. நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதை பாலத்தின் மேல் பகுதியில் நின்று கொண்டு கண்டு ரசித்தனர்.




மேலும் தண்ணீர் அதிக அளவு வெளியேறுவதால் பொதுப்பணித்துறை மற்றும் ஜீயபுரம் காவல்துறை மூலமாக வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்து விடப்பட்டது. ஆனால் அதை மீறி ஏராளமான சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் இறங்கி ஆனந்தமாக குளித்தனர். இன்று காலை திருச்சி முக்கொம்பு மேலணைக்கு மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட 1 லட்சம் 32 ஆயிரம் கன அடி நீர் வந்துக்கொண்டு இருப்பதை முன்னிட்டு, முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரி ஆற்றில் 47874 கன அடி தண்ணீரும், கொள்ளிடத்தில் 65639 கன அடி தண்ணீரும், பாசன வாயிக்கால், அய்யன்பெருவளை, புள்ளம்பாடி ஆகிய வாய்க்காலில் 1000 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கொள்ளிடம், முக்கொம்பு பகுதிகளில் நேரில் ஆய்வு செய்தார். பின்பு திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் வெள்ள நீர் நேற்று  மாலை முதல் திறக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் காவிரி, கொள்ளிடம் கரையோரங்களில் இறங்க வேண்டாம் எனவும், கொள்ளிடம் ஆற்றில் உள்ள சலவைத்தொழிலாளிகள் அங்கிருந்து உடனே வெளியேற வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது என்றார்.




மேலும் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் திருச்சி மாவட்டத்திற்கு ஏற்கனவே வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது. இந்நிலையில் காவேரி, கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தபட்டுள்ளது என்றார். மேலும்  முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பாதையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படுகிறது. புதிய கொள்ளிடம் பாலத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் பாலத்தில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படுவதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண