பெரம்பலூர் மாவட்டம் அருகே உள்ள எசனை கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி கடந்த 17 ஆண்டுகளாக போதிய மழை இல்லாமல் நிரம்பாமல் இருந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு நல்ல மழை பெய்தது. இதனால் எசனை பெரிய ஏரி நிரம்பி வழிந்து கடைமடை வரை தண்ணீர் சென்றது. பின்னர் விவசாயிகள் இந்த ஏரி தண்ணீர் மூலம் விவசாயம் செய்து வந்தனர். இந்த ஏரியில் பொதுமக்கள் சார்பில், மீன் குஞ்சுகள் வாங்கி விடப்பட்டு, தண்ணீ்ர் குறைந்தவுடன் சுற்று வட்டார கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி மீன் பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த 2010-ம் ஆண்டு மே மாதம் எசனை பெரிய ஏரியில் மீன் பிடி திருவிழா நடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து 12 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று எசனை பெரிய ஏரியில் மீன்பிடி திருவிழா நடந்தது. இதையொட்டி நேற்று காலை 8.30 மணியளவில் மீன்பிடி திருவிழா தொடங்கியது. இதில் எசனை, பெரம்பலூர், வேப்பந்தட்டை, கோனேரிபாளையம், அன்னமங்கலம், ஆலம்பாடி, சோமண்டாபுதூர், வடக்கு மாதவி, ஏரிக்கரை, செஞ்சேரி, பாளையம், குரும்பலூர், திருப்பெயர், பாலையூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், மீன் பிடி வீரர்கள் ஆர்வத்துடன் இறங்கி வலை, கத்தா, கூடை, சேலை, கொசு வலைகளை பயன்படுத்தி மீன்களை பிடிக்க தொடங்கினர். ஆனால் அதில் சிலருக்கு மட்டுமே அதிகளவு மீன்கள் கிடைத்தது.
மேலும் பெரும்பாலானோருக்கு குறைந்த அளவே மீன்கள் கிடைத்தன. அதிலும் கெண்டை, கெழுத்தி, தேளி உள்ளிட்ட மீன்கள் மட்டுமே கிடைத்தன. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீன்பிடி திருவிழா நடந்ததால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், நிறைய பேர் மீன்கள் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியில் முன்பெல்லாம் காப்பாளர்கள் பணியில் இருப்பார்கள். இதனால் ஏரியில் யாரும் மீன் பிடிக்கவும், மரங்களை வெட்டவும் முடியாது. மீன் பிடி திருவிழாவில் மட்டுமே மீன்கள் பிடிக்க அனுமதிக்கப்படுவர். அப்போது நிறைய மீன்கள் கிடைக்கும். தற்போது ஏரியில் காப்பாளர்கள் கிடையாது. இதனால் ஏரியில் தண்ணீர் நிரம்பியதில் இருந்து உள்ளூர், வெளியூரை சேர்ந்தவர்கள் தினமும் மீன் பிடித்து சென்றதால் தற்போது மீன் பிடி திருவிழாவில் நிறைய பேர் மீன்கள் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் சென்றனர். மரங்களும் வெட்டப்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏரிக்கு காப்பாளர்களை நியமிக்க வேண்டும் என்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்