பள்ளி மாணவி மரணம் தொடர்பான நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டதால் வன்முறை நிகழ்ந்துள்ளது - பாலகிருஷ்ணன்

தற்கொலை முடிவை மாணவர்கள் கைவிட வேண்டும் என்றும், நீட் தேர்வு மரணங்களுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தான் காரணம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.

Continues below advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் விளக்க-நிதியளிப்பு பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. இதற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். மாநிலக்குழு உறுப்பினர்களான சின்னதுரை எம்.எல்.ஏ., சாமி. நடராஜன் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர். முன்னதாக பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த விவகாரத்துக்கு நீதி கேட்டு மாணவர்கள் அமைப்பினர் அமைதியான முறையில் போராடி வந்த நிலையில், அங்கு வன்முறை சம்பவம் ஏற்பட்டுள்ளது. இதேபோல் அந்த பள்ளியில் சில மரணங்கள் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தவும், நடவடிக்கை எடுக்கவும் தமிழக காவல்துறை டி.ஜி.பி., உள்துறைசெயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கை வரவேற்கக்கூடியதாக உள்ளது. ஆனாலும், நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டதால் இதுபோன்ற வன்முறை நிகழ்ந்துள்ளது என்றார்.

Continues below advertisement


மேலும் இந்த சம்பவத்தில் தொடர்பில்லாத பலரை காவல்துறை கைது செய்து வழக்கு போட்டு வருகிறார்கள். இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். இந்த நடவடிக்கையை காவல்துறையினர் கைவிட வேண்டும். அந்த மாணவியின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இதனை தொடர்ந்து போட்டி தேர்வு மற்றும் தேர்வு பயத்தால் அல்லது தேர்வில் தோல்வி அடைந்தால் மாணவ-மாணவிகள் தற்கொலை முடிவை எக்காரணம் கொண்டும் தேடக்கூடாது. எந்த பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வு அல்ல. தற்கொலை முடிவை மாணவர்கள் கைவிட வேண்டும்.  நீட் தேர்வு தொடர்பான பலரது மரணத்துக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தான் காரணம். நீட் தேர்வை முழுவதுமாக கைவிட வேண்டும். இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அளவிலும், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி. போடும் அவல நிலை உள்ளது. எல்லாவற்றுக்கும் வரி போட்டுக்கொண்டே போனால் இலங்கையில் நிகழும் நிலை இந்தியாவிலும் ஏற்படும் என்றார். 


காவிரி -குண்டாறு திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும். காவிரியில் பல இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும். காவிரி நீரை கடலுக்கு செல்லாமல் தடுக்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட அரசு மருத்துவக்கல்லூரி திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டு 15 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் சிறப்பு பொருளாதார மண்டலம் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இல்லையெனில் இத்திட்டத்துக்காக கையகப்படுத்திய நிலங்களை விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

Continues below advertisement
Sponsored Links by Taboola