காவிரி பாலம் முழுவதும் மூடப்பட்டதால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்

பராமரிப்பு பணிக்காக காவிரி பாலம் முழுவதும் மூடப்பட்டதால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர்.

Continues below advertisement

திருச்சி- ஸ்ரீரங்கத்தை இணைக்கும் காவிரி பாலம் கனரக வாகனங்கள் செல்லும் போது ஏற்படும் அதிர்வுகள் காரணமாக பாலத்தின் பேரிங்குகள் முழுமையாக சேதமடைந்தது. இதையொட்டி பராமரிப்பு பணிகள் செய்வதற்காக கடந்த செப்டம்பர் மாதம் 10-ந் தேதி பாலம் மூடப்பட்டது. எனினும் காவிரி பாலத்தில் 2 மீட்டர் இடைவெளி விட்டு இரு சக்கர வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் செல்ல அனுமதிக்கப்பட்டு வந்தனர். இதில் கார் மற்றும் கனரக வாகனங்கள் அனைத்தும் பைபாஸ் வழியாக ஸ்ரீரங்கம் பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டது. இந்நிலையில் காவிரி பாலத்தை ஹைடிராலிக் ஜாக்கி மூலம் தூக்கி வைத்து பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதற்காக காவிரி பாலம் முழுவதும் மூடப்படும் என மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி 20 ஆம் தேதி  நள்ளிரவு முதல் காவிரி பாலம் முழுவதுமாக மூடப்பட்டது.

Continues below advertisement


இதனால் நேற்று ஸ்ரீரங்கம், மேலூர், திருவானைக்காவல் ஆகிய பகுதிகளில் இருந்து பள்ளி, கல்லூரி, அலுவலக பணிக்கு இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் பெரும் சிரமம் அடைந்தனர். அவர்கள் சென்னை - மதுரை தேசிய நெடுஞ்சாலை, கும்பகோணத்தான் சாலை, ஓயாமரி சாலை வழியாக அண்ணாசிலை, சத்திரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட மாநகர் பகுதிக்கு வருகை தருகின்றனர். காவிரி பாலத்தின் மிக அருகாமையில் உள்ள பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்கள் சிலர் நடந்து செல்வதை பார்க்க முடிந்தது. இதுபோல ஒய் ரோடு, கல்லணை ரோடு, சர்க்கார்பாளையம், சஞ்சீவ் நகர் பகுதி மக்களும் நேற்று பைபாஸ் ரோடு வழியாக சென்றனர். இதனால் காலை 8 மணி முதல் 10 மணி வரை ஓயாமரி பாலத்தில் வாகனங்கள் அணிவகுத்து சென்றது. அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். 


மேலும் ஸ்ரீரங்கம் திருவானைக்கோவில் பகுதிகளில் வசிக்கும் பள்ளி மாணவ மாணவிகள் காவேரி பாலத்தை கடந்து சென்று கல்வி பயின்று வருகின்றனர். மேலும் அன்றாட பிழைப்புக்காக தினசரி கூலி வேலை செய்பவர்கள் இந்த காவிரி பாலத்தை கடக்க வேண்டி இருக்கின்றது. இதில் அதிகம் குடும்பத் தலைவிகளும் பெண்களும் இளைஞர்களும் தினசரி பணிக்கு செல்ல காவேரி பாலத்தை கட்டாயமாக கடக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆனால் இப்போது பாலத்தை முழுமையாக மூடிவிட்டார்கள். இதனால் மாணவ மாணவிகள் கல்லணை ரோடு வழியாக ஓயாமாரி சுடுகாடு வழியாக அண்ணா சாலையை கடந்து செல்ல வேண்டி இருக்கிறது. எனவே மாம்பழச் சாலையில் இருந்து அண்ணா சாலைக்கு செல்வதற்கு பழைய காவிரி இரும்பு பாலத்தினை திறந்து இருசக்கர வாகனம் மட்டும் அனுமதித்தால் பள்ளி கல்வி தடைப்படாமல் இருக்கும். அது மட்டுமல்லாமல் பாலம் அடைக்கப்பட்டுள்ளதால் பள்ளி மாணவர்கள் மூன்று கிலோ மீட்டருக்கு மேல் சுற்றிவர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது முழு ஆண்டு தேர்வு பொது தேர்வுகளில் கவனம் செலுத்த முடியாமல் போய்விடும் சூழ்நிலை உள்ளது. ஆகவே பழைய காவிரி இரும்பு பாலத்தை திறந்து அதில் இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். 

Continues below advertisement