திருச்சியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ரெங்கராஜ், வெங்காய வியாபாரி. திருச்சி காந்திமார்க்கெட் ஜெயில்பேட்டை ரோட்டில் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளன. இந்த கடைகள் மாநகராட்சி சார்பில் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இதில் ஒரு கடையை ஆறுமுகம் வாடகைக்கு பிடித்து இருந்தார்.


தற்போது, அந்த கடையில் ஆறுமுகம் மகன் ரங்கராஜ் வெங்காய வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் அந்த கடையை ரங்கராஜ், மற்றொரு வெங்காய வியாபாரியான ராஜா என்பவருக்கு உள்வாடகைக்கு விட்டுள்ளார். இதற்காக அவரிடம் இருந்து ரூ.1 லட்சம் பெற்றுள்ளதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து ரங்கராஜியின் சகோதரர்கள் அவருக்கு தெரியாமல் ராஜாவிடம் ரூ.5 லட்சம் பெற்றதாக தெரிகிறது.


கத்திக்குத்து :


இதற்கிடையே நேற்று ரங்கராஜ் கடையை காலி செய்யுமாறு ராஜாவிடம் தெரிவித்தார். அப்போது, ரங்கராஜ் ஒப்பந்தப்படி ரூ.1 லட்சம் மட்டுமே தருவதாக ராஜாவிடம் கூறினார். இதில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதமாகி கைகலப்பானது. இதில் ஆத்திரமடைந்த ரங்கராஜ் கத்தியை எடுத்து ராஜாவை குத்தியதாக கூறப்படுகிறது. மேலும் ஆத்திரம் தீராமல் ரங்கராஜ் ஒரு கையில் லைட்டரை பற்ற வைத்து, மற்றொரு கையில் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை எடுத்து கொண்டு ராஜா மீது ஊற்றுவதற்காக விரட்டினார். இதில் ராஜா அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். பின்னால் விரட்டி சென்ற ரங்கராஜ் ஒரு கட்டத்தில் ராஜா மீது பெட்ரோலை ஊற்றினார்.




அப்போது எதிர்பாராத விதமாக பெட்ரோல் கைத்தவறி ரங்கராஜ் உடல் மற்றும் தலை மீது கொட்டியது. இதில் கையில் வைத்திருந்த லைட்டர் தீ மூலம் ரங்கராஜ் உடல் மற்றும் தலையில் தீப்பற்றி மளமளவென எரிய தொடங்கியது. இதில் அவர் வலியால் அலறியபடி நடுரோட்டில் ஓடினார்.இதனை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த சக வியாபாரிகள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். பின்னர் பலத்த தீக்காயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் கத்திக்குத்தில் காயம் அடைந்த ராஜாவும் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.