இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தது தொடர்பாக நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் கடந்த 1991ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர்.  28 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் கடந்த மே மாதம் பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 


இதையடுத்து, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக சிறையில் அடைக்கப்பட்ட நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோரும்,  தங்களை விடுதலை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் தனித்தனியே மனுத்தாக்கல் செய்தனர்.


விடுதலை :


இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில்,  வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பானது, அதே வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கும் பொருந்தும் என்று தீர்ப்பு வழங்கியது.


கடந்த 10 மாதங்களாக பரோலில் உள்ள நளினி, வழக்கம்போல் கையெழுத்திடுவதற்காக காட்பாடி காவல்நிலையத்திற்கு சென்றார். இதனிடையே, அவரை விடுவிப்பதற்கான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பான ஆவணங்கள், வேலூர் பெண்கள் மத்திய சிறையை வந்தடைந்தன. அதைதொடர்ந்து, அங்கு சென்ற நளினி உரிய நடவடிக்கைகள் அனைத்தையும் நிறைவு செய்த பிறகு, முறைப்படி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதனிடையே, புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த, ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரும் விடுதலை செய்யப்பட்டனர். 


சிறப்பு முகாம்:


திருச்சி-புதுக்கோட்டை சாலையில் உள்ள மத்திய சிறை வளாகத்தில் வெளிநாட்டினருக்கான சிறப்பு முகாம் உள்ளது. தமிழ்நாட்டில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் வெளிநாட்டினர் இந்த சிறப்பு முகாமில் தங்க வைக்கப்படுகின்றனர். சட்ட விரோதமாக வெளிநாடு செல்ல முயன்றது, போலி பாஸ்போர்ட் முறைகேடு உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர்கள் உள்பட நைஜீரியா, பல்கேரியா, வங்காளதேசம், இந்தோனேசியா உள்பட 130 வெளிநாட்டினர் இந்த முகாமில் தங்கி உள்ளனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை முடிந்து, விடுதலை செய்யப்படும் வரை சிறப்பு முகாமில் தங்க வைக்கப்படுவார்கள்.


இந்நிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் இருந்து உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோர் சிறையில் இருந்து நேற்று விடுதலை செய்யப்பட்டனர். எனினும் அவர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமுக்கு நேற்று நள்ளிரவு அழைத்து வரப்பட்டனர். அவர்களின் வருகையை சிறப்பு முகாமின் பொறுப்பு அதிகாரி சப்-கலெக்டர் வேலுமணி முறைப்படி பதிவு செய்தார்.


போலீஸ் பாதுகாப்பு :


பின்னர் அவர்கள் அங்குள்ள அறைகளில் தங்க வைக்கப்பட்டனர். முன்னதாக இவர்கள் 4 பேரும் இங்கு அழைத்து வரப்பட்டதையொட்டி, திருச்சி மத்திய சிறை வளாகத்துக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நான்கு பேரும் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டாலும், அவர்கள் வெளிநாட்டினர் என்பதால் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறையின் கியூ பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளார். அவர்கள் சொந்த நாட்டுக்கு செல்வதும், வெளிநாட்டினர் என பதிவு செய்து இந்தியாவில் தங்கி இருப்பதும், இலங்கை தமிழர் நலவாழ்வு முகாமுக்கு செல்வதும் அவர்களின் விருப்பம் என்றும், மத்திய உள்துறை அனுமதி கிடைத்ததும் விரைவில் அவர்கள் இங்கிருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.