கரூர் தனியார் பள்ளி பதினொன்றாம் வகுப்பு கணித ஆசிரியர் நேற்று மாலை துறையூர் மாமனார் நடராஜ் வீடான செங்காட்டுபட்டியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்த துறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கரூர் கணித ஆசிரியர் சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இதைத்தொடர்ந்து தற்கொலை சம்பந்தமாக ஏதேனும் கடிதம் உள்ளதா என்று போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இடத்தில் கடிதமொன்றை கைப்பற்றியுள்ளனர். அந்த இரண்டு பக்க கடிதத்தில் அவர் ”மாணவர்கள் என்னை தவறாக புரிந்து கொண்டு கேலியும் கிண்டலும் செய்கிறார்கள் எனவும், நான் எந்த குற்றமும் செய்யாதவன்” எனவும் தெரிவித்துள்ளார். அதேபோல் தனது அம்மா, அப்பா ,மனைவி மற்றும் குழந்தைகள் மற்றும் உறவினர்களிடையே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என கடிதத்தை எழுதி வைத்துள்ளார்.




கடந்த 19-ஆம் தேதி தனியார் பள்ளி மாணவி மாலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவர் கடிதம் ஒன்றை எழுதி விட்டு தற்கொலை செய்து கொண்டார். அக்கடிதத்தில், “எனக்கு பாலியல் தொந்தரவு அளித்திருப்பதாகவும், அவர்கள் பெயரை நான் குறிப்பிட எனக்கு பயமாக இருக்கிறது” எனவும், உருக்கமான கடிதத்தை தொடர்ந்து அந்த கடிதத்தின் அடிப்படையில்  6 தனிப்படை அமைத்து பள்ளி மற்றும் குடும்ப உறுப்பினர்களிடையே தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், நேற்று கரூரில் கல்லூரி மாணவர்கள் காலையில் பேருந்து நிலையம் அருகே மாணவி தற்கொலைக்கு உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதை தொடர்ந்து அங்கு வந்த காவல் கண்காணிப்பாளர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.




இந்தக் கைதை தொடர்ந்து தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கல்லூரி வளாகத்தில் கோஷமிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க ஊர்வலமாக புறப்பட்டனர். இந்த தகவலை அறிந்த காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் ஊர்வலமாக வந்த மாநில இடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களிடையே வழக்கு விசாரணை பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.


அதைத்தொடர்ந்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் இருந்து கலைந்து சென்றனர். நேற்று பரபரப்பாக நடைபெற்ற இந்த மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நேற்று மாலை இந்த ஆர்ப்பாட்டம் குறித்து பள்ளி மாணவியின் தாயார் மாணவியின் தற்கொலை வழக்கில் விசாரணை நேர்மையாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், ஆகவே யாரும் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார். 




இப்படிப்பட்ட சூழ்நிலையில் நேற்று காலை பள்ளிக்கு வந்த பதினொன்றாம் வகுப்பு கணித ஆசிரியர் சரவணன், தன் தற்கொலை கடிதத்தில் மாணவர்கள் அவரை கேலி கிண்டல் செய்ததாக குறிப்பிட்டுள்ளார். மதியம் தனது தந்தையாரின் உடல்நிலை சரியில்லை என கூறிவிட்டு பள்ளியில் இருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு கிளம்பியுள்ளார். அவர் நேராக திருச்சி மாவட்டம், துறையூர், செங்காட்டுப்பட்டியிலுள்ள நடராஜ் மாமனார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இரண்டு பக்க கடிதம் எழுதி விட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்போது துறையூர் போலீசார் கடிதத்தை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கரூர் அருகே 19-ஆம் தேதி பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் தற்போது அதே பள்ளியில் சேர்ந்த கணித ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050