திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசியது.. 


விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் அக்டோபர் 2 ஆம் தேதி அன்று மது மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு மகளிர் மாநாடு கள்ளக்குறிச்சியில் நடைபெற உள்ளது. இந்தியா முழுவதும் மது விலக்கை தேசிய கொள்கையாக அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைத்து அந்த மாநாடு நடத்தப்பட உள்ளது. போதை பொருட்கள் பிரச்சனையை மாநில அளவிலான பிரச்சனையாக கருதாமல், தேசிய பிரச்சனையாக கருதி இந்தியா முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். இந்த மாநாடு குறித்து கட்சி சார்பற்ற ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து பரப்புரையில் ஈடுபட உள்ளோம்.


முதலமைச்சரின் அமெரிக்க பயணம் வெற்றிகரமாக அமையட்டும். தொழில் முனைவோர் சந்திப்பு வெற்றி அமைய வாழ்த்துகள்


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 15 நாள் பயணம் மேற்கொள்கிறார். இந்த நாட்களில் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் நிர்வாகத்தை கவனித்து கொள்ள முடியும். முதலமைச்சர் வெளிநாடு செல்லும் நாட்களில் இடைக்கால முதலமைச்சராக துரைமுருகனை நியமிக்க வேண்டும் என சீமான் பேசுவது சம்மந்தமில்லாத கோரிக்கை. திமுகவை சீண்டி பார்க்கும் கோரிக்கை.


மது விலக்கு என்பதற்கு மாற்று என எதுவும் இல்லை. முழுமையாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். மது விலக்கு முழுமையாக இருந்தால் கள்ளச்சாராயத்தையும் கட்டுப்படுத்த முடியும்.




சினிமாவில் இருந்து வந்து ஆட்சியை பிடிக்க முடியாது


சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தால் ஆட்சியை பிடிக்க முடியும் என சிலர் நினைப்பார்கள். தமிழ்நாட்டில் சிலர் முயன்றும் பார்த்துள்ளார்கள். அது அவர்களால் முடியவில்லை. எம்.ஜி.ஆர் நடிக்கும் போதே அரசியலில் இருந்தார். அவர் அதிமுக தொடங்கியபோது தி.மு.கவிலிருந்து விலகிய பல மூத்த திறமையான அரசியல்வாதிகள் அவருடன் இருந்தார்கள். அது தான் அவர் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தது.


கட்சி தொடங்கி உள்ள விஜய்க்கு வாழ்த்துக்கள். அவர் அரசியல் எவ்வளவு கடினமானது என்பதை நடைமுறையில் சந்திக்க வேண்டும், நன் மதிப்பை பெற வேண்டும்.  அப்பொழுது தான் விஜய்யின் அரசியல் நிலைப்பாடு குறித்து கூற முடியும். யுகத்தில் கணக்கு போட்டு எதையும் கூற முடியாது.


இந்து சமய நல துறை மதம் சார்ந்த பல வேலைகள் செய்கிறது. அந்த வகையில் பழனியில் முருகன் மாநாடும் நடந்தது. பல லட்சம் மக்களின் ஆதரவோடு அது வெற்றி பெற்றுள்ளது.


பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் போன்ற இயக்கங்கள் மதம், கடவுள் ஆகியவற்றை வைத்து கொண்டு வட இந்தியாவில் வாக்கு வங்கி அரசியல் செய்ய முயற்சித்தார்களோ அந்த முயற்சிக்கு தமிழ்நாட்டில் இடமளிக்காமல் அவர்களின் அரசியல் சதியை அம்பலப்படுத்தும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை செயல்பட்டால் அதனை வரவேற்க கடமைப்பட்டுள்ளோம்.


பழனி முருகன் மாநாடு சிறப்பாக நடந்துள்ளது. அதில் விமர்சிக்க ஒன்றுமில்லை ஆனால் அற நிலையத் துறை சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் பக்தி இலக்கியங்கள் தொடர்பான போட்டிகள் நடத்தப்படும் என அந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  அந்த நடவடிக்கை மதம் சார்ந்த நடவடிக்கையாக இல்லாமல் அரசு கவனித்துக் கொள்ளும் என நம்புகிறேன் என்றார்.