திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி புதிய மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் இன்று திமுகவின் துணை பொதுசெயலாளரும், எம்.பியுமான கனிமொழி தலைமையில்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுகவை சேர்ந்த மகளிர் அணியினர் பங்கேற்றனர். மேலும் மகளிரணியை வலுப்படுத்துவதற்கான திட்டங்களையும், கருத்துக்களையும் கலந்தாலோசித்துள்ளனர். அதோடு வருகின்ற 17ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள திமுக மகளிரணி மாநாட்டில் மாவட்டம் தோறும் பெண்கள் பங்கேற்க வேண்டும் என்பதற்காக அவர்களை நேரில் சந்தித்து அழைப்புவிடுக்கும் கூட்டமாகவும் நடைபெற்றது. இக்கூட்டத்தில், திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு,  தெற்கு மாவட்ட  செயலாளரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் சிறப்பு விருந்தினராகளாக பங்கேற்றனர். இதனை தொடர்ந்து மேடையில் பேசிய கனிமொழி ”இந்த கூட்டம் என் கண்ணுக்கு மலர்கள் தெரியவில்லை தீப்பந்தம் போல் தான் தெரிகிறது. நாம் சுழன்று எரிவோம். முதன் முதலில் திராவிட முன்னேற்ற கழகம் தேர்தலில் போட்டியிடலாமா வேண்டாமா என முடிவெடுத்த மண் இந்த திருச்சி மண். திராவிட இயக்கம் என்பது பெண்கள் உழைப்பை மதிக்கக் கூடிய, பெண்களின் உரிமைகளுக்காக போராடக்கூடிய இயக்கம் தான் திராவிட இயக்கம்.




மற்ற மாநிலங்களில் வாக்குரிமைக்காக போராடினார்கள். தமிழ்நாட்டில் எந்த போராட்டம் செய்யாமல் நமக்கு வாக்குரிமை கொண்டு வந்த இயக்கம் திராவிட இயக்கம். பெண்கள் படிக்க வேண்டும், சொத்துரிமை, உதவி திட்டம் கொண்டு வந்தவர் தலைவர் கலைஞர், இதற்கு அடுத்தாற்போல் பெண்கள் உரிமை தொகையை கொண்டு வந்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பெண்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டு வந்தது திமுக தான். அடுத்த தேர்தலில் 50 சதவீதம் கொண்டு வரப்பட்டு பெண்கள் அதில் வெற்றி பெற்றார்கள். கொரோனாவிற்குப் பிறகு மிகப்பெரிய அளவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு இருந்தது. பெண்கள்  பணிக்கு செல்வது, படிக்க செல்பவர்கள் தடைப்படக்கூடாது என இலவச மகளிர் பேருந்து கொண்டுவரப்பட்டது. தடைகளையும் ஒவ்வொன்றாக உடைக்கக் கூடியது திராவிட முன்னேற்றக் கழகம். ஆயிரம் ரூபாய் உரிமை தொகை பெண்களின் சிந்தனை மாற்ற கூடிய திட்டமாகும். விடுதலைக்கான வித்து என்றால் மகளிர் உரிமைத் தொகை திட்டம்” என தெரிவித்தார்.




இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி  பேசியது.. 


”மகளிர்க்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வர வேண்டும் என டெல்லியில் போராட்டம் நடத்தினோம், ஆனால் இத்தனை ஆண்டு காலம் அதை கண்டுக்கொள்ளவில்லை.  நாடாளுமன்ற புதிய கட்டிடத்தில் நாடாளுமன்றம் கூடிய உடன் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா கொண்டு வரப்படும் என தெரிவித்தார்கள். இது அனைவருக்கும் மகிழ்ச்சி. ஆனால் இதைக் கொண்டு வர வேண்டும் என்றால் அதற்கு முன்னதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். தொகுதி மறு வரையறை செய்ய வேண்டும். அதன் பிறகு மகளிர் இட ஒதுக்கீடு மசோதா கொண்டுவரப்பட வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது ஆரம்பிக்கும் என்று யாருக்கும் தெரியாது. பல வருடங்களுக்கு கழித்து கூட ஆரம்பிக்கலாம். இந்த கணக்கெடுப்பு எத்தனை ஆண்டுகள் நடக்கலாம் என்று தெரியாது. அதன் பிறகு மறு வரையறை செய்கிறோம் என்று சொல்கிறார்கள்.  தமிழகத்தில் பல்வேறு இடங்களில் முன்னேறி இருக்கிறது. குடும்ப கட்டுப்பாட்டை சரியாக பின்பற்றி இருக்கின்ற தமிழ்நாட்டு மக்கள் தொகை குறைந்து இருக்கிறது. மற்ற மாநிலங்களில் மக்கள் தொகை அதிகரித்து இருக்கிறது.




தொகுதி மறு வரையறை வந்தால் பாதிக்கப்படுவது நம் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள். இதற்கு நாம் போராட வேண்டும். மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதா என்பது வெறும் கண்துடைப்பு. இது உண்மையான மகளிர் இடஒதுக்கீடு மசோதா இல்லை, பெண்களை ஏமாற்றுவதற்காக பொய் பிரச்சாரங்களை செய்து கொண்டிருப்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஜாதி, மதம் வாரியாக மக்களை பிரித்தாள வேண்டும் என நினைக்கிறார்கள். இதில் அதிகமாக பாதிக்கப்படுவது பெண்கள்தான். குறிப்பாக வன்முறை, அரசியல் அதிகாரம் தலை தூக்குகிறதோ அது பெண்களுக்கு எதிராக மாறும். மத்தியில் இந்த ஆட்சி வரக்கூடாது என போராட கூடியவர்கள் பெண்கள் தான். வரக்கூடிய தேர்தலில் பெண்கள் மனதில் வைத்துக் கொண்டு பணியாற்ற வேண்டும்.


அக்டோபர் 14ஆம் தேதி சென்னையில் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் சோனியா காந்தி பங்கேற்க இருக்கிறார்கள். இதில் பெண்கள் பிரச்சினைகள், வலிகள், குறைகள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. காவிரி நீர் பிரச்சனையில் மத்திய அரசு நியாயத்தின் பக்கம் அவர்கள் நிற்கவில்லை” என தெரிவித்தார்.