திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் நேற்று வாழை பங்குதாரர்கள் மற்றும் வாழை விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆராய்ச்சி மைய இயக்குனர் செல்வராஜன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பேசியதாவது: வாழையின் முக்கியத்துவத்தை பற்றி நான் தெரிந்து உள்ளேன். ஆனால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் வாழை ஒரு கற்பக கருவாக கருதப்பட்டு வாழையில் பல்வேறு பகுதிகளில் இருந்து பலதரமான பொருட்கள் தயாரிக்க முடியும் என்பதை அறியும் பொழுது பெருமிதமாக உள்ளது. நாட்டிற்கு உணவை கொடுக்கும் விவசாயிகள் உணவில்லாமல் இருக்கும் நிலைமை மாறி அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படுவதே தற்போது முக்கியத்துவமாக கருதப்படுகிறது. வேளாண்மையில் நாம் உருவாக்கக்கூடிய தொழில்நுட்பங்கள் இன்னும் விவசாயிகளை சென்றடைய வேண்டும். கரும்பு, நெல், கோதுமை விளைவித்தால் அதை பதப்படுத்துதல் மற்றும் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. அது போல் வாழை விவசாயத்திலும் பதப்படுத்துதல், கொள்முதல் நிலையங்களை உருவாக்குவதில் நாம் முனைப்புடன் செயல்பட வேண்டும் என தெரிவித்தார். முன்னதாக, கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சி அரங்கை பார்வையிட்டு அதன் தொழில்நுட்ப வல்லுனர்களுடன் அந்தந்த தொழில்நுட்பங்களை பற்றி உரையாடினார்.






மேலும் கூட்டத்தில் வாழை பங்குதாரர்கள் மற்றும் வாழை விவசாயிகள் பேசும்போது, திருச்சியை வாழை ஏற்றுமதி சிறப்பு பொது மண்டலமாக மாற்ற வேண்டும். தமிழ்நாட்டின் வாழை ரகங்கள் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாழையை பதப்படுத்தும் மையங்கள் தமிழகத்தில் அனைத்து பகுதியிலும் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த நிகழ்ச்சியில் முதன்மை வாழை விவசாயிகள், வேளாண் அறிவியல் நிலைய அதிகாரிகள், வாழை ஏற்றுமதியாளர்கள், வாழைத்தொழில் முனைவோர்கள், கல்வியாளர்கள் மற்றும் மற்ற வாழை சார்ந்த பங்குதாரர்கள் என 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.