திருச்சி மாவட்டத்திலிருந்து மாநிலத்தின் எந்த ஒரு பகுதிக்கும் சில மணி நேரங்களில் பயணித்துவிட முடியும் என்பதால் அரசுப் போக்குவரத்து கழகம் மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் திருச்சிக்கு அதிகளவிலான பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இதால் திருச்சி நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்ததன் காரணமாக திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் 6.60 ஏக்கர் பரப்பளவில் மத்திய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கும் சுமார் 3,100 பேருந்துகள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை இங்கு வந்து செல்கின்றன. ஆனால் இவ்வளவு பேருந்துகள் தற்போதைய பயணிகளை சமாளிக்கும் வகையில் உட்கட்டமைப்பு, அடிப்படை வசதிகள், சர்வீஸ் ரோடு, போன்றவை இல்லாததால், மத்திய பேருந்து நிலையத்தைச் சுற்றிலும் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் 1990ஆம் ஆண்டிலிருந்தே ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்கான கோரிக்கை பொது மக்களிடம் இருந்து வந்தது. 1994ஆம் ஆண்டு திருச்சி மாநகராட்சியான நிலையில், சத்திரம் பேருந்து நிலையத்தையொட்டி கரூர் நெடுஞ்சாலையில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு அது தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் 2004ஆம் ஆண்டு சாருபாலா தொண்டைமான் மேயராக இருந்தபோது, சென்னை நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள தேவதானம் பகுதியில் தனி நபர்களிடமிருந்து சுமார் 40 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கி, அதில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க திட்டமிட்டார்.
ஆனால் அதை அப்போதைய அதிமுக அரசு ஏற்க்கொள்ளவில்லை ஆகையால் அதுவும் கைவிடபட்டது. மேலும், காவிரிக் கரையிலிருந்து 200 மீட்டருக்குள் அமைந்திருந்ததால், சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் காரணம்காட்டி அங்கு புதிய பேருந்து நிலையம் அமைக்க தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி மறுத்தது. எனவே, தேவதானம் திட்டமும் தோல்வியில் முடிந்தது.
அதைத்தொடர்ந்து 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தது. பேருந்து நிலையத்துக்கான இடத்தை தேர்வு செய்ய அரசு சார்பில் மாநகராட்சி, மாவட்ட அதிகாரிகளைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அவர்கள், திண்டுக்கல் சாலையில் பிராட்டியூர், மதுரை சாலையில் பஞ்சப்பூர், மன்னார்புரத்திலுள்ள ராணுவ பயிற்சி மையம், புதுக்கோட்டை சாலையில் கொட்டப்பட்டு, தஞ்சாவூர் சாலையில் அரிய மங்கலம் உரக்கிடங்கு ஆகிய இடங்களைப் பரிந்துரைத்தனர். இதில், மதுரை சாலையில் உள்ள பஞ்சப்பூர் தேர்வானது. அங்கு 244.28 ஏக்கர் பரப்பளவில், பேருந்து நிலையம் அமைக்க திமுக அரசு முடிவு செய்தது. அப்போதைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அதற்கான இடத்தைப் பார்வையிட்டுச் சென்றார்.
ஆனால், அந்தசமயத்தில் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. 2011ஆம் ஆண்டு அதிமுக அரசு அமைந்ததால் திமுக கொண்டுவந்த பஞ்சப்பூர் திட்டத்தை கிடப்பில் போட்டபட்டது. அதிமுக நிர்வாகிகள் உதவியுடன் அதிகாரிகள் புதிதாக இடம் தேடினர். அதன்பேரில், பிராட்டியூரிலுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் எதிர்புறத்திலுள்ள காலியிடம், பொன்மலைப்பட்டி செல்லும் சாலையிலுள்ள சிறைத் துறைக்குச் சொந்தமான இடம், ஜி-கார்னர் மைதானத்துக்கு எதிரே மாடு வதைக்கூடத்துக்கு அருகிலுள்ள நிலம் உட்பட சிலவற்றைப் பட்டியலிட்டனர். இவற்றில் எந்த இடத்துக்கும் அரசிடமிருந்து இதுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை.
எனவே, திருச்சியின் கனவுத் திட்டமான ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் என்பது, கனவாகவே தொடர்ந்த நிலையில், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்றார். அதேபோல் தற்போது திமுக ஆட்சி அமைந்துள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற்ற பட்ஜெட் கூட்ட தொடரில் நிதி அமைச்சர் திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கபடும் என்று தெரிவித்தார். இந்த அறிவிப்பினால் திருச்சி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.