சோழ அரசி பெருந்தேவி குந்தவை நாச்சியார் தனது அரண்மனையின் அருகாமையில் கடலினை பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டாராம், இதனை நிறைவேற்றும் வகையில் ராஜராஜசோழன் அவசர அவசரமாக மிகப் பெரிய ஏரியை வெட்டும் பணியை தொடங்கினார். பின்னர் அதில் நீரை நிரப்பி கடல் போல காட்சி அளிக்கும்படி செய்தார், இதுவே சமுத்திரம் ஏரி என்று வரலாறு என ஆவணங்களில் கூறப்படுகிறது. இதனை தற்போது தமிழக அரசு அழகிய சுற்றுலா மையமாக மாற்றுவதற்கு பணிகளை மேற்க்கொண்டுள்ளது.
இதன்படி தஞ்சை சமுத்திரம் ஏரியை 8 கோடி ரூபாய் செலவில் புரனமைக்கும் பணியை பொதுப்பணித்துறை விரைவில் தொடங்க உள்ளது. இதில் பூங்கா, படகு சவாரி ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் பாசன வசதிகளை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. குறிப்பாக பல்வேறு இடங்களில் தடுப்பணை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் நிலத்தடி நீரை செறிவூட்டும் திட்டமும் செயல்படுத்தபடவுள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே கல்லணை கால்வாயை நவீனப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.
முதல் கட்டமாக 5 இடங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தஞ்சை மாவட்டம் கல்லணை கல்வாய் பாசன பகுதியில் புளியந்தோப்பு கிராமத்தில் அமைந்துள்ள சமுத்திரம் ஏரியை புனரமைக்க பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரத்துறை முடிவு செய்துள்ளது. பொதுப்பணித்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி கண்காணிப்பில், கீழ் காவிரி வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன் தலைமையில் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் இப்பணியை மேற்கொள்ள உள்ளனர். தஞ்சையில் உள்ள சமுத்திரம் ஏரி மன்னன் ராஜராஜசோழனால் அமைக்கப்பட்டதாகும். கல்லணை கால்வாய் பாசன அமைப்பில் அமைந்துள்ள ஏரிகளில் சமுத்திரம் ஏரி மிகப்பெரியதாகும். இந்த ஏரி புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் அருகே அமைந்துள்ளது. இந்த ஏரியின் மூலம் 6 கிராமங்களில் உள்ள 1116 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. அத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த ஏரியின் மிக அருகில் அமைந்துள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு வருகை புரிந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஏரியை புனரமைக்கும் பணி பொதுப்பணித்துறை விரைவில் தொடங்க உள்ளது.
இது தொடர்பாக பொதுப்பணித்து உதவி செயற்பொறியாளர் சண்முகவேல் கூறியதாவது: புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு வரும் உள்ளூர் பொதுமக்கள், வெளியூர் சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாட்டினர் இந்த ஏரியை ஒரு பொழுதுபோக்கு தலமாக மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதன்படி சமுத்திரம் ஏரியை தூர்வாரி, ஆழப்படுத்தி ஏரியின் கொள்ளளவை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஏரியில் தலைப்பு மதகு மற்றும் உபரிநீர் கலிங்கை மறுகட்டுமானம் செய்யவும், ஏரியின் கரைகளை பலப்படுத்தும் பணியும் செய்யப்படவுள்ளது. இந்த ஏரியில் படகு சவாரி, சிறுவர் பூங்கா, சிறுவர் விளையாட்டுத் திடல், வண்ண விளக்குகள், புல்வெளி அமைப்பு, பார்வையாளர்கள் உட்காரும் வசதியுடன் கூடிய நடைபாதை வசதி ஆகியவற்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்டுள்ள பொழுதுபோக்கு வசதிகளை அமைப்பதன் மூலம் புன்னைநல்லூருக்கு வருகை புரியும் பக்தர்கள், உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகளுக்கு ஏற்ற சுற்றுலா தளமாக இந்த இடம் மாறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.