திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆங்கியம் கிராமம். இந்த கிராமத்தின் கடைசி பகுதியில் ஆங்கியம் கரடு என்று அழைக்கப்படும் காட்டுப் பகுதி உள்ளது. இந்த பகுதிகளில் வன விலங்குகளான சிறுத்தை, கரடி, உள்ளிட்ட விலங்குகள் சுற்றி திரிவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று காலை அப்பகுதி பெண்கள் கரடு பகுதி அருகே சென்றபோது உருமல் சத்தம் கேட்டுள்ளது. அப்போது கவனித்து பார்த்த போது சிறுத்தை ஒன்று சென்றுள்ளது. உடனே மக்கள் அனைவரும் வனத்துறை அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று மதியம் வீரமச்சான்பட்டி பகுதி வனக்காப்பாளர் நஸ்ருதீன் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது, கரடு அருகே சிறுத்தை இருப்பதை கவனித்தார்.உடனே வனதுறை அதிகாரிக்கு தகவல் கொடுத்தார்.
இதனை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் சுஜாதா, பொறியாளர் ஆனந்தகுமார், உதவி வனபாதுகாவலர் சம்பத்குமார் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். மேலும் சிறுத்தையை பிடிக்க திருச்சி வனசரக அலுவலர் குணசேகரன், துறையூர் வனசரக அலுவலர் பொன்னுசாமி தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க மறைக்காடு மற்றும் குகை பகுதியில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிப்பதா அல்லது கோயம்புத்தூர் கால்நடை மருத்துவ அலுவலரை வரவழைத்து மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதா என்று வனத்துறையினர் ஆலோசித்து வருகின்றனர்.