பெரம்பலூர் அருகே கீழக்கணவாய் வடக்கு தெருவை சேர்ந்தவர் கஞ்சமலை என்ற பெரியண்ணன். இவரது மகன் செல்வன் (33). என்ஜினீயர் படிப்பு படித்துள்ள இவர் படிப்புக்கு ஏற்ற  வேலை கிடைக்காததால் அதே கிராமத்தில் எலக்ட்ரீசியன் மற்றும் பிளம்பர் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று 32 வயதுடைய பெண் ஒருவர் அவரது வீட்டில் குளித்து கொண்டிருந்ததை செல்வன் மறைந்து இருந்து தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். பின்னர் அந்த வீடியோவை செல்வன் அந்த பெண்ணின் 15 வயதுடைய மகளின் செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்-அப் மூலம் அனுப்பியதாக தெரிகிறது. மேலும் செல்வன் அந்த சிறுமியிடம் தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறும், இல்லையென்றால், உன் தாயின் குளியல் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து விடுவேன் என்றும் மிரட்டி வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி இதுகுறித்து தனது தாயிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதையடுத்து சிறுமியின் தாய் இது தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகார் தெரிவித்தார்.

 



 

அதன்பேரில் மாவட்ட  காவல்  சூப்பிரண்டு மணி உத்தரவின்பேரில், பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல்நிலைய  இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா தலைமையிலான காவல்துறையினர் அதிரடியாக செல்வனை கைது செய்து விசாரணை நடத்தினர். தொடர் விசாரணையில், செல்வனின் இந்த செயலுக்கு முழுக்க முழுக்க உடந்தையாக இருந்தது அவரது அக்கா உறவுமுறையான அதே ஊரைச் சேர்ந்த முத்துசாமி மனைவி மலர்கொடி (45) என்பது தெரியவந்தது. இதையடுத்து மலர்கொடியையும் காவல்துறையினர் கைது செய்தனர். செல்வன், மலர்கொடி மீது காவல்துறையினர்  போக்சோ, பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டியது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும்  செல்வனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் பெண் கைக்குழந்தை ஒன்று உள்ளனர். செல்வனின் தாய் வேலூர் ஊராட்சியில் 5-வது வார்டு உறுப்பினராகவும் உள்ளார். மலர்கொடிக்கும் ஒரு மகள் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 



 

பெரம்பலூர்  மாவட்டத்தில் பெண் குளிப்பதை ஆபாசமாக வீடியோ எடுத்து 15 வயது சிறுமியை உல்லாசத்துக்கு அழைத்த இளைஞர் கைது செய்யப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பெண்கள் குளிப்பது பெண்களைப்பற்றி ஆபாச வார்த்தைகளை சமூக வலைதளங்களில் பயன்படுத்துவது வீடியோ எடுப்பது பாலியல் தொல்லை கொடுப்பது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது உடனடியாக சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இதனை தொடர்ந்து பொது மக்களும் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். யார் தவறான எண்ணத்தில் தங்களை அணுகினாலும் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கும்படி பொதுமக்களிடம் காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.