திருச்சி புத்தூர் நால்ரோடு பகுதியில் பா.ஜ.க. சார்பில் மத்திய அரசின் 8 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் முன்னிலை வகித்தார். மேலும் பாஜக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை சிறப்புரையாற்றினார். அப்போது, அவர் பேசுகையில், “அமைப்பு சார தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் 62 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு 2 லட்சம் உதவித் தொகை வழங்க வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. ஏழை எளிய மக்கள் உயர வேண்டும் அவர்களும் முதலாளிகளாக வேண்டும் என்பதற்காகத்தான் பிரதமர் மோடி பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். ஜி.எஸ்.டி.யில் எவ்வளவு நிதி தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கே தெரியவில்லை. பிரதமர் மோடி சென்னைக்கு வந்தபோது, எங்களுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை தாருங்கள் என்று கேட்டார். அதற்கு பிரதமர் ஜி.எஸ்.டி. நிலுவை தொகை ரூ.9 ஆயிரத்து 602 கோடியை நாங்கள் கொடுத்து விட்டோம் என்று மேடையில் கூறிவிட்டார். பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின்தான் மருத்துவ சீட் 66 ஆயிரம் சீட்டாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் ஏழை-எளிய மாணவர்கள் மருத்துவர்களாக உருவாக வேண்டும் என்பதே நமது இலக்கு. பா.ஜ.க. புதிய கல்வி கொள்கை மூலம் இந்தியை கண்டிப்பாக திணிக்காது. அமைச்சர் பொன்முடி விருப்பம் உள்ளவர்கள் இந்தியை தேர்வு செய்து படிக்கலாம் என்று கூறி வருகிறார். புதிய கல்விக் கொள்கையில் என்ன உள்ளதோ அதை அப்படியே கையில் எடுத்துக் கொண்டு தான் தமிழகத்தின் கல்வி கொள்கை என்று கூறி வருகின்றனர். இங்கு உள்ள அமைச்சர்கள் அனைவருமே தமிழகத்தை தாண்டி எங்குமே செல்ல மாட்டார்கள். கச்சத்தீவை பா.ஜ.க. மீட்கும். 18 கோடி தொண்டர்கள் பா.ஜ.க.வில் உள்ளனர். உலகத்திலேயே மிகப்பெரிய ஜனநாயக கட்சி பா.ஜ.க.தான். நீங்கள் (தி.மு.க.) செய்யும் ஒவ்வொரு ஊழல்களையும் மக்கள் மன்றத்தில் நாங்கள் தொடர்ந்து வைக்கப்போகிறோம். 2024-ம் ஆண்டு கண்டிப்பாக பா.ஜ.க.வின் எம்.பி. தான் திருச்சியில் இருப்பார்” என்றார்.
திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு புதிதாக காஸ்டியூம் போட்டிருக்கிறார். மீண்டும் காவி வேட்டி கட்டத் தொடங்கியுள்ளார். மதுரை ஆதீனத்தை அமைச்சர் சேகர்பாபு தொடர்ந்து மிரட்டி வருகிறார். மதுரை ஆதீனத்தை மிரட்டினால் விளைவுகள் மோசமாக இருக்கும். இதேபோல சிதம்பரம் கோயில் விவகாரத்திலும் அமைச்சர் சேகர் பாபு தலையிடுகிறார். இதனை தொடர்ந்து தமிழக பால் வளத் துறை அமைச்சர் நாசரும் மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் போட்டிபோட்டு பேட்டி கொடுத்து வருகின்றனர். நியூட்ரீசன் திட்டத்தில் கமிஷன் நடைபெற்றுள்ளது. அதை ஆதாரத்தோடு நாங்கள் நிரூபிப்போம். அனைத்து இடத்திலும் ஊழல் செய்யும் ஒரு கட்சியாக திமுக வளர்ந்துள்ளது என்று அண்ணாமலை பேசினார்.