தமிழ்நாட்டில் மக்களைத் தேடி முதல்வர் திட்டத்தின் கீழ் திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் வரும் 29 மற்றும் 30ஆம் தேதிகளில் தமிழ்நாடு  முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக தஞ்சாவூர் செல்லும் முதல்வர் அங்கு சங்கம் ஹோட்டலில் இரவு தங்குகிறார். இந்நிலையில் மறுநாள் காலை தஞ்சாவூர் சரபோஜி கல்லூரியில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்ளும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். அதனைத் தொடர்ந்து பிற்பகல் 12.30 மணி அளவில் தஞ்சாவூரில் இருந்து சாலை மார்கமாக புறப்பட்டு திருச்சி வரும் முதல்வர் மன்னார்புரம் சுற்றுலா மாளிகையில் ஓய்வு எடுக்கிறார். பின்பு பிற்பகல் 3.30 மணி அளவில் சுற்றுலா மாளிகையிலிருந்து விழா நடக்கும்  ராம்ஜிநகர் அடுத்த உள்ள கேர் கல்லூரிக்கு  செல்லும் முதல்வர் அங்கு திருச்சி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் முதியோர் ஓய்வு ஊதியம், இலவச வீட்டு மனை பட்டா, மாற்றுதிறணாளிக்கான உபகரணங்கள் , பெண்கள் ,மகளிர் குழுவிற்கு நலத்திட்ட உதவிகள்,  என 40 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.




அதனைத் தொடர்ந்து திருச்சி மாநகராட்சியில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூபாய் 28.24 கோடியில் மேம்படுத்தும் பணி முடிக்கப்பட்ட சத்திரம் பேருந்து நிலையம், ரூபாய் 11.36 கோடியில் மலைக்கோட்டையை அழகுபடுத்தும் ஒளிரும் மின்விளக்குகள் திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார். அதனை தொடர்ந்து பஞ்சப்பூர் பகுதியில் 140 கோடியில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், 76 கோடியில் கனரக வாகனம் முனையம், 59 கோடியில் பல்வகை பயன்பாடுகள், 50 கோடி தளவாட கிடங்கு, ரூபாய் 75 கோடியில் சில்லறை வணிகம் மற்றும் வணிக வளாகம், ரூபாய் 60 கோடியில் திருச்சி காந்தி சந்தை மேம்படுத்தும் பணி, 100 கோடியில் மத்திய பேருந்து நிலையம் மேம்படுத்தும் பணி, ரூபாய் 110 கோடியில் பஞ்சப்பூர் பகுதியில் காய்கறி மொத்த வியாபார கடைகள், ரூபாய் 87 கோடியில் பஞ்சப்பூர் பகுதியில் பூங்காக்கள் திறந்தவெளி இடங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கும் பணிகள் என மொத்தம் ரூபாய் 832 கோடி மதிப்பிட்டில் நடைபெறும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.




இதனை தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு கே.கே. நகர் காவலர் ஆயுதப்படை வளாகம் செல்லும் முதல்வர் அங்கு ரூபாய் 10 கோடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள திருச்சி ரைபிள் பிளக் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை தொடங்கி வைத்து பார்வையிடுகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு விமான நிலையம் செல்லும் முதல்வர் இரவு 8.50 மணிக்கு அங்கிருந்து சென்னை புறப்பட்டு செல்கிறார். முதல்வர் வருகையையொட்டி திருச்சியில் 5ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என காவல்துறை ஆணையர் கார்த்திக்கேயன் தெரிவித்தார். இந்நிலையில் திருச்சி மாவட்டத்திற்க்கு வரும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை பிரமாண்டமாக வரவேற்க வேண்டும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.