திருச்சி அரசு பொது மருத்துவமனை அருகே உள்ள தனியார் ஹோட்டலில் மருத்துவ காப்பீடு திட்ட பணியாளர்கள் நல சங்கம் சார்பாக வாழ்வாதார பாதுகாப்பு முதல் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை மாநிலத் தலைவர் மணிவண்ணன் தொடங்கி வைத்தார்.
மருத்துவ காப்பீடு திட்டம்:
இதில் சிறப்பு விருந்தினராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டார். இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம் முன்னாள் தமிழ்நாடு திமுக தலைவர் கலைஞர் மக்கள் மேய சிந்தனையில் கலைஞர் காப்பீடு திட்டமாய் உதயமாகி, பின்னர் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டமாக பரிணமித்து, மக்களின் மருத்துவ பிணிப்போக்கும் மகத்தான திட்டமாக விளங்கி வருவது முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் ஆகும்.
தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகள் திட்டத்தை 15 ஆண்டுகாலமாக மிகச் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றது. இந்தத் திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய மக்கள் மிகவும் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் அரசாணை எண் 219 - ன்படி காப்பீடு திட்டத்தில் பணிபுரியும் தற்காலிக பணியாளருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள திருத்திய ஊதியம் நமக்கு பேரதிர்ச்சியை அளிக்கிறது.
கோரிக்கைகள்:
ஏற்கனவே ரூபாய் 15,000 மாத ஊதியமாக பெற்று வரும் வார்டு மேலாளர்களுக்கு டையாலிசிஸ், டெக்னீசியன், கேத்லாப் டெக்னீசியன், ரூபாய் 12,000 மாத ஊதியம் எனவும் மாவட்ட ஆட்சியரின் தினக்கூலி அடிப்படையில் மாதந்தோறும் ரூபாய் 10,000 கூடுதலாக பல்நோக்கு பணியாளர்கள் பெற்று வந்த நிலையில் தற்போது அவர்களுக்கு ரூபாய் 8,500 மாத ஊதியம் எனவும் நிர்னைக்கப்பட்டுள்ளது .கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் நிலையில் புதிய அரசாணையின்படி ஏற்கனவே பெற்று வந்த ஊதிய மறுக்கப்பட்டு ஊதிய குறைப்புக்கு பணியாளர்கள் ஆளாக்கப்பட்டு இருப்பது குறித்து கடந்த ( 27.07.2023) அன்று சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் ஆகியோர்களை நேரில் சந்தித்து முறையீடு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள கோரிக்கைகளில் விபரம்..
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட பணியாளர்களின் ஊதிய குறைப்புக்கு வழிவகுக்கும் அரசாணை 219 ரத்து செய்ய வேண்டும். 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் வார்டு மேலாளருக்கு அடிப்படை ஊதியம் ரூபாய் 20,000 ஆகவும் டயாலிசிஸ், டெக்னீசியன், கேத்லாப் டெக்னீசியன் அடிப்படை ஊதியம் ரூபாய் 18,000 ஆகவும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு ரூபாய் 16,000 ஆகவும், இதயம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். மேலும் வருடாந்திர ஊதிய உயர்வு 5% ராயல்டி போனஸ் வழங்கப்பட வேண்டும். 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பு ஊதியத்தில் பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும். தேசிய சுகாதார பணியாளர்களுக்கு வழங்கப்படும் விடுப்புகள் EPF,ESI மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டும். முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களை தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் பணியாளர்களாக வரையறுக்கப்பட வேண்டும். முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் பணிபுரிந்து வரும் ஹவுஸ் கீப்பர் மாற்றுப் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ். பிரதிநிதி:
இதனை தொடர்ந்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியது..
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வகிப்பது உயரிய பொறுப்பு. அந்த பொறுப்பிற்குரிய முறையில் செயல்படவில்லை. அவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிரதிநிதியாக, பா.ஜ.க.வின் மிகச்சிறந்த தொண்டராக செயல்படுகிறார். அவர் கவர்னர் பொறுப்பில் இருந்து கொண்டு, சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறுவது தவறானது. சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்தான் நீட் தேர்வு விலக்கு மசோதா.
இது ஒரு கட்சி சார்ந்த பிரச்சினை அல்ல என்பதை கவர்னர் புரிந்து கொள்ள வேண்டும். தி.மு.க. கொடுத்ததாலேயே அவர் நிராகரிக்கிறாரா? என்று தெரியவில்லை. இது ஒரு பொதுவான கோரிக்கை என்பதால் நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கவர்னர் முன் வர வேண்டும். மேலும் நாங்குநேரியில் நடந்த சம்பவம் கடுமையான கண்டனத்திற்குரியது. அந்த விவகாரத்தில் அரசு உடனடியாக தலையிட்டு அந்த குடும்பத்திற்கு உதவி செய்திருக்கிறது. அந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார் என தெரிவித்தார்.