பேரறிஞர் அண்ணா அவர்கள் 1967-ம் ஆண்டு சட்டப்பேரவையில் ஜுலை 18ம் நாளன்று சென்னை மாகாணம் என்றிருந்த பெயரை மாற்றி மீண்டும் தமிழ்நாடு என அழைக்க தீர்மானம் நிறைவேற்றி அறிவித்தார்கள். எனவே அந்த நாளை அனைவரும் நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் ஜுலை-18ம் நாளினை தமிழ்நாடு நாளாக கொண்டாட கடந்த வருடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்ததை தொடர்ந்து, வருடந்தோறும் இந்நாள் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. அதனடிப்படையில் திருச்சி மாவட்டத்தில், இன்று தமிழ்நாடு நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் திருச்சி வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் தமிழ்நாடு நாள் எனும் வடிவிலான பள்ளி மாணவ, மாணவியர்களின் அணிவகுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப் குமார் பார்வையிட்டு, தமிழ்நாடு நாள் ஜூலை-18 குறித்து மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியினை கொடியசைத்து தொடங்கி வைத்து, இப்பேரணியில் கலந்து கொண்டார்.
மேலும் இப்பேரணியில் மாணவ, மாணவியர்கள் தமிழ்நாடு நாள் ஜூலை-18 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எங்கும் தமிழ் எதிலும் தமிழ், எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு. தமிழன் என்று சொல்லுங்கள், தலை நிமிர்ந்து நில்லுங்கள், தமிழ் உயர்ந்தால் தமிழ்நாடு தானுயரும், இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர், வாழ்க தமிழ், வெல்க தமிழ், தமிழுக்கு அமுதென்று பேர், என் தமிழே என் தமிழ்நாடே, வளம் பெற்று உயர்ந்த தமிழ்நாடே. கலை பல பெற்று உயர்ந்த தமிழ்நாடே, அண்ணா பெயர் சூட்டிய தமிழ்நாடு, யாதும் ஊரே யாவரும் கேளீர் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி முழக்கமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த பேரணியானது வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தொடங்கி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. இந்நிகழ்வுகளில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிந்த அரசின் சாதனை விளக்கப் புகைப்படக்கண்காட்சியினை பொதுமக்களின் பார்வைக்காக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திறந்து வைத்து, மாணவ, மாணவியர்களுடன் கண்காட்சியில் இடம்பெற்றிருந்த புகைப்படங்களை பார்வையிட்டார்கள். இக்கண்காட்சியானது 18.07.2023 முதல் 23.07.2023 வரை பொது மக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படவுள்ளது. பின்னர் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் தமிழ்நாடு நாள் ஜூலை-18ஐ கொண்டாடும் வகையில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப் குமார் அவர்கள் நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இரா.அபிராமி, முதன்மை கல்வி அலுவலர் திரு.சிவக்குமார், உதவி இயக்குநர் செய்தி மக்கள் தொடர்புத்துறை திரு.வ.பாலசுப்ரமணியன், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், கல்வித்துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.