திருச்சி மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் ஹெச். ராஜா கருப்பு சட்டை அணிந்தபடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “டெல்டா விவசாயிகளுக்கு தி.மு.க அரசு துரோகம் இழைத்து வருகிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு மேகதாது கட்டுவதற்கு அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது. ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதனை கண்டிக்காமல் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்துகொள்ள கர்நாடகா சென்றுள்ளார். கர்நாடகாவில் பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் மேகதாது அணை குறித்து எந்த குறிப்பும் இல்லை. செந்தில் பாலாஜி வழக்கை  பொறுத்தவரை 60 நாளில் மாநில அரசு இந்த வழக்கை விசாரணை செய்து முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.


செந்தில் பாலாஜி இடமிருந்து 19 ஆயிரம் கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக எனக்கு தகவல் வந்துள்ளது. அது உண்மையா என்பதை நீங்கள் அமலாக்கத் துறையிடம் தான் கேட்க வேண்டும். பல்லாயிர கோடி ரூபாய்க்கு கிராவல்களை எடுத்து விற்ற குற்றவாளி அமைச்சர் பொன்முடி , ஆடி 1ம் தேதி நேற்று இ.டியின் ஸ்பெசல் ஆஃபர் இங்கு நடந்தது. செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை தற்போது நடத்தி வரும் சோதனையை பொறுத்தவரை 2014 ஆம் ஆண்டு போட்ட வழக்கு, அப்போது மு.க.ஸ்டாலின் குளித்தலையில் பேசினார், செந்தில் பாலாஜி எப்படியாவது சிறைக்கு செல்ல வேண்டும். எனவே அதனை நிறைவேற்ற தான் தற்போது அமலாக்கத்துறை உதவி செய்து வருகிறது.





மேலும் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடியை தொடர்ந்து அடுத்து கே.என்.நேரு அல்லது அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறலாம். அமலாக்கத்துறை சோதனைக்கும் பாஜகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. தக்காளி விவசாயிகள் படும் பாடு அதிகம். எனவே 40 ரூபாய்க்கு கீழே தக்காளி விலை குறைந்தால் அரசே அதனை வாங்குவோம் என்கிற முடிவை எடுக்க வேண்டும். மேலும் நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு பொதுமக்கள் தக்காளி வாங்காமல் இருந்தால் தக்காளியின் விலை குறையலாம். இந்தியாவின் பிரதமர் ஆவதற்கு தமிழ்நாட்டில் யாருக்கும் தகுதி இல்லை. காவிரி தண்ணீர் வராததற்கு காரணம் திமுக தான். அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த கருணாநிதி கண்டு கொள்ளாமல் தமிழகத்தை அழிப்பதற்காக கர்நாடகாவில் பல அணைகளை கட்ட அனுமதித்தது தான். அதுபோல் தான் இப்போது மு.க.ஸ்டாலின் கண்டுகொள்ளாமல் விவசாயிகளுக்கு துரோகம் செய்துள்ளார் என்றார்.


மேலும், குடிகாரனை குடிகாரர் என்று சொல்லக்கூடாது என அமைச்சர் முத்துசாமி சொல்கிறார் என்ற கேள்விக்கு ? அமைச்சர் முத்துசாமி நல்ல நண்பர், நல்ல மனிதர், அவர்,  குடிக்காமலே ஏன் காலையில் இப்படி பேசுகிறார். குடிகாரனை குடிகாரன் என்று தான் சொல்ல வேண்டும். 44,000 கோடி வரி வருகிறது இதில் தான் அரசு நடக்கிறது என்றார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக திருச்சி  மாவட்ட தலைவர் எஸ். ராஜசேகரன், நிர்வாகிகள் ஒண்டி முத்து, பொன்.தண்டபாணி, லீமா சிவக்குமார், ஸ்ரீராம் சங்கர், வாசன் வேலி சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.