நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல்- 2024 குறித்து நிலைப்பாடு எடுப்பதற்காக மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை செயற்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மமக தலைவர் பேராசிரியர். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ , தலைமையில் நடைபெற்றது. இதில் தலைமை நிர்வாகிகள் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த செயற்குழுவில் விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலின் முக்கியத்துவம் நாட்டின் சூழல் உள்ளிட்டவை குறித்த கருத்துக்கள் விரிவாக விவாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியர்களை சந்தித்து பேசிய ஜவாஹிருல்லா கூறியது.
இந்தியா கூட்டணிக்கு ஆதரவு..
கடந்த பத்தாண்டு கால ஒன்றிய பாஜகவின் ஆட்சி நாட்டை படுபாதளத்திற்கு தள்ளி, எல்லா தரப்பு மக்களின் நிம்மதியை பறித்துள்ளது. இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தையும், மக்களாட்சியையும், மாநிலங்களின் உரிமைகளையும் மதச்சார்பின்மையையும் அடியோடு அழிக்க துடிக்கும் பாசிச மதவாத பாஜக தனது செயல் திட்டங்களை நிறைவேற்றிட தேர்தலை ஒரு கருவியாக்கி மிகுந்த சூழ்ச்சிகளோடு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த பயங்கர அபாயங்களிலிருந்து நாட்டை மீட்பதற்கு மதச்சார்பற்ற சக்திகள் ஓர் அணியில் திரண்டு இந்தியா கூட்டணியை உருவாக்கியது. அதில் மனிதநேய மக்கள் கட்சியும் அங்கம் வகிக்கிறது. இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்து இந்நாட்டை பாசிச அபாயத்திலிருந்து மீட்க தமிழ்நாடு மற்றும் புதுவையில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.
திமுக கூட்டணியில் பத்தாண்டுகளாக பயணித்து வரும் மனிதநேய மக்கள் கட்சி கூட்டணி கொள்கை கோட்பாடுகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும், மதவாத பாசிஸ்டுகளுக்கு களத்திலும், கருத்திலும் பதில் கொடுத்து அம்பலப்படுத்துவதிலும் மகத்தான பங்கினை ஆற்றி வருகிறது. தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வலிமையாக நின்று கூட்டணியின் வெற்றிக்கு தோள் கொடுத்து வரும் மமகவுக்கு 2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படாதது வேதனைக்குரியது. இருந்தாலும் நாட்டின் நலனை கருத்தில் கொண்டும் கூட்டணி கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் கோரிக்கையை ஏற்றும் மமக 2019 தேர்தலில் மகத்தான ஆதரவை தந்து அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வைத்தது.
2025 - மாநிலங்களவையில் ஒரு இடம் வேண்டும்
அதேபோல் 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் மக்களவையில் முஸ்லிம் பிரதிநிதிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வரும் வேளையில் மமகவிற்கு ஒரு தொகுதி ஒதுக்குவதே சமூக நீதியாகும் ஒருவேளை 2024 மக்களவைத் தேர்தலில் தொகுதி ஒதுக்கப்பட முடியாத சூழல் ஏற்பட்டால் 2025 ல் தமிழ்நாட்டில் இருந்து நிரப்பப்படும் மாநிலங்களவைத் தேர்தலில் ஒரு தொகுதி கட்டாயம் மமகவுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும்,கார்ப்பரேட் முதலாளிகளை காப்பதற்கும், ஏழை எளிய மக்களை காவு கொடுப்பதற்கும் ஒன்றிய பாஜக முன்னெடுத்த ஊழல் நடவடிக்கைகள் அனைத்தும் அம்பலப்பட்டு அக்கட்சி இழிவுகளை சுமந்து நிற்கிறது. தேர்தல் பத்திர முறைகேட்டில் உச்சநீதிமன்றம் ஒன்றிய பாஜக அரசுக்கு தெரிவித்த கண்டனமும் அதன் உச்சமாக உள்ளது.
இந்நிலையில் தனது உலகமறியா உச்சகட்ட ஊழல்களை மறைப்பதற்கும், ஒன்றிய அரசின் தோல்விகளை மக்கள் விவாதிக்காமல் திசை திருப்புவதற்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்துவதாக ஒன்றிய பாஜக அரசு அறிவித்துள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் ஒன்றிய அரசு இச்சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதாக அறிவித்து அரசியல் சூதாட்டத்தை அரங்கேற்றியுள்ளது. வன்மையாக மனிதநேய மக்கள் கட்சி கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம் என கூறினார்.