திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திமுக ஆட்சியில் போதை பொருட்கள் அதிகரித்துள்ளதை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசுகையில்.. ”மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று கூறிவிட்டு மது கடைகளை படிப்படியாக குறைக்கும் நடவடிக்கையில் கூட ஈடுபடவில்லை. தாய்மார்களும், பெற்றோர்களும் அடி வயிற்றில் நெருப்பைக்  கட்டிக்கொண்டு இருக்கும் வகையில், கல்லூரிகள், அரசு பள்ளிகளுக்கு செல்கின்ற மாணவர்களை 30 வயதில்  உள்ள இளைஞர்களை குறி வைத்து தாக்கும் விதமாக போதைப்பொருள் கலாச்சாரம் இன்றைக்கு தமிழக முழுவதும் பரவி கிடக்கிறது. வருங்கால இந்தியாவாகிய இளைஞர்கள் சமுதாயத்தை சிதைக்கும் அளவிற்கு இன்றைக்கு தமிழ்நாட்டில் போதைப்பொருளின் நடமாட்டம் சந்திசிரிக்கும் அளவிற்கு வந்துவிட்டது. திமுகவின் தேர்தல் அறிக்கையில் 179வது தேர்தல் வாக்குறுதியில் பட்டதாரிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என சொல்லியிருந்தார்கள்.


அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் இளைஞர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்று குறிப்பிட்டு இருந்தார். ஆனால் இன்று இளைஞர்கள் அரசு வேலைக்கு வழியில்லாமல் இருக்கிறார்கள். வேலை இல்லாமல் மனக்கஷ்டத்தில் இருக்கும் இளைஞர்களை குறி வைத்து தாக்கும் விதமாக போதை பொருட்கள் விற்பவர்கள் குறி வைக்கிறார்கள். மதுவிற்கு அடிமையானவர்களை கூட காப்பாற்ற முடியும். ஆனால் போதை பொருட்களுக்கு அடிமையானவர்களை காப்பாற்ற முடியாத நிலை உள்ளது. இந்த ஆட்சியாளர்கள் உடனடியாக அவசரக்கதியில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய அளவிற்கு தமிழ்நாட்டையே அச்சுறுத்தும் ஒன்றாக போதை கலாச்சாரமாக உள்ளது.




திமுகவின் முன்னாள் நிர்வாகியான ஜாபர் சாதிக் கடந்த மூன்று நான்கு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 3500 கோடிக்கும் மேற்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்து உள்ளார். ஜாபர் சாதிக் சொல்லும் தகவல்களின் அடிப்படையில் பெரிய புள்ளிகள், முக்கிய பிரமுகர்களை விசாரணையில் நடுத் தெருவிற்கு கொண்டு வரும் நிலை ஏற்படும்.திமுக ஆட்சிக்கு வந்தால் சட்டம் ஒழுங்கு சீர் குலையும். ரவுடிகள் அட்டூழியம் தலைவிரித்தாடும் என்பது உண்மை. விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு ஊழல் என தலைவிரித்தாடுகிறது. ஏற்கனவே ஆட்சி செய்த சனியன் எடப்பாடி. பழனிச்சாமையால் ஊழல் நிறைந்திருந்தது, சனியனை அனுப்பிவிட்டு காலனை கொண்டு வந்த கதையாகி விட்டது.முன்பெல்லாம் இதுபோன்ற கூட்டம் என்றால் டாஸ்மாக் குடித்துவிட்டு யாராவது ஒருவர் நிற்பார்கள், ஆனால் தற்போது சாதிக் சரக்கு சாப்பிட்டவர்கள் நிற்பார்களோ என்ற அச்சம் தோன்றுகிறது. தமிழ்நாடு முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த ஆர்ப்பாட்டம்.


பாழாய்ப் போன திமுக ஏன் ஆட்சிக்கு வந்தது என வருத்தப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் போதைப்பொருள் புழக்கம் ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் காவல்துறை மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை போய்விடும். இந்த ஆட்சி முடிவுக்கு வரும் நிலை ஏற்படும். வருங்காலத்தில், போதை பொருள் புழக்கம் அதிகரித்ததால் மக்களே இந்த ஆட்சியை கலைத்து விட்டார்கள் என்ற நிலை வந்துவிடுமோ எனும் உணர்வு ஏற்பட்டுள்ளது. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.திமுக எப்பொழுது எல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்பொழுது நான் தமிழக மக்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது. அப்படிதான் மீனவர்கள் தங்களது உரிமைகளுக்காக போராடி வருகிறார்கள்.




நம்பி இருந்த அனைவருக்கும் துரோகம் செய்த பழனிச்சாமி உப்பைத் தின்றவர் தண்ணீர் குடிப்பார் என்பதற்குப் போல அவர் பதில் சொல்லும் காலம் வரும். எடப்பாடி பழனிச்சாமியின் கூட்டணியை சீண்ட கூட ஆளில்லை. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆறு மாதங்களாக பாஜக கட்சியுடன் கூட்டணி பேசிக்கொண்டிருக்கிறோம். அதுவும் ஜனநாயக முறைப்படி தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்றும் பாஜகவின் முக்கிய பிரமுகர்களுடன் கலந்து ஆலோசித்து, இன்று அதிகாரப்பூர்வமாக கூட்டணியை அறிவித்துள்ளோம். எனவே பாராளுமன்ற தேர்தலில் நிபந்தனையற்ற ஆதரவை பாஜகவிற்கு தரவுள்ளோம். 2017 இல் பாஜக எங்களை புரிந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம். ஆனால் தற்போது புரிந்து கொண்டதால் எங்களுடன் கூட்டணி வைத்துள்ளனர்.நம்முடன் கூட்டணி வேண்டுமென்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மனதார பேச்சுவார்த்தை நடத்தினார். உங்களின் ஆதரவோடு நான் திருச்சி தொகுதியில் போட்டியிடலாம் அல்லது கூட்டணியை சேர்ந்த யாரேனும் போட்டியிடலாம், எனவே இரவு பகல் பாராது உழைத்து பணியாற்றி வெற்றி பெற செய்ய வேண்டும்” என்றார்.