திருச்சி, ஸ்ரீரங்கத்தில் ஓடும் காவிரி ஆற்றுக்கு நடுவே இருக்கும் தீவு அரங்கத்தில் இறைவன் கோவில் கொண்டுள்ளதால் “திருவரங்கம்” என இத்தலம் அழைக்கப்படுகிறது. இக்கோவிலின் இறைவனாகிய பெருமாள் ரங்கநாயகர் எனவும் தாயார் ரங்கநாயகி எனவும் அழைக்கப்படுகிறார்கள். புராணங்களின் படி ராவணன் வதத்திற்கு பின்பு அயோத்தியின் மன்னனாக ஸ்ரீராமர் முடிசூடும் விழாவிற்கு வருகை தந்த விபீஷணனுக்கு, ஸ்ரீ நாராயணனின் சிறிய சிலையை ராமர் பரிசளித்தார். அதை பெற்றுக்கொண்டு இலங்கைக்கு திரும்பும் வழியில் இறைவழிபாடு செய்ய விரும்பிய விபீஷணன், இடையன் உருவிலிருந்த விநாயகரிடம் நாராயணனனின் சிலையை கொடுத்து, அதை எக்காரணம் கொண்டும் கீழே வைக்கக்கூடாது என கூறி காவேரி நதி தீரத்திற்கு சென்றான் விபீஷணன். விபீஷணன் வருவதற்கு நேரம் ஆகியதால் அச்சிலையை கீழே வைத்து சென்று விட்டார் விநாயக பெருமான். பிறகு வந்த விபீஷணன் நாராயணனின் சிலை கீழே வைக்கப்பட்டிருப்தை அறிந்து, அதை அகற்றுவதற்கு முயற்சித்தான். அப்போது நாராயணன் அசரீரியாக தான் இங்கேயே இருக்க விரும்புவதாக விபீஷணனிடம் கூறினார். ஆனால் விபீஷணனுக்கு வாக்களித்தது போலவே அவனது இலங்கை நாடு இருக்கும் தெற்கு திசையை பார்த்தவாறே தான் வீற்றிருப்பதாகவும் கூறினார். இத்தகையை சிறப்பு மிக்க கோவில் 5000 ஆண்டுகள் பழமையான கோவில் என்பது குறிப்பிடதக்கது.





 

மேலும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மொத்தம் 21 கோபுரங்கள் உள்ளது. இதில் தற்போது நாம் தரிசனம் செய்யும் ராஜகோபுரம் 236 அடி உயரம் கொண்டது. தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. 21 கோபுரங்களில் மற்றவை வண்ணமயமாய் காட்சி அளிக்க, ஒன்று மட்டும் வெள்ளை நிறத்தில் இருக்கும். இந்த நிலையில், கடந்த மாதம் 25 ஆம் தேதி கிழக்குவாசல் நுழைவு வாயில் கோபுரத்தின் 2 நிலைகளில் மேற்கூரை பூச்சு இடிந்து விழும் நிலையில் விரிசல் ஏற்பட்டது. இதனால் அபாயகரமான நிலையில் உள்ள கோபுர வாசல் வழியாக பக்தர்கள் சென்று வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. சீர் செய்யாமல் நிலைகளில் கம்புகளைக் கொண்டு முட்டுக் கொடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

 



 

மேலும் இதுக்குறித்து கோவில் நிர்வாகம் தரப்பில் கூறியது “கோவில் கோபுரத்தில் விரிசல் ஏற்படவில்லை, ஏற்கெனவே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆடி மாத சிறப்பு திருவிழா நடைபெற்று வருவதால் தற்போது பணிகள் நடைபெறவில்லை. மேலும் கோபுரத்தில் ஏறி செல்ல ஏதுவாக மரபலகை அங்கே வைக்கபட்டுள்ளது. இந்த பலகையில் தான் இன்று விரிசல் ஏற்பட்டது. கோபுரத்திற்க்கும் இந்த விரிசலுக்கும் சம்பந்தம் இல்லை என்றார். மேலும் கோபுரங்கள் சீரமைக்கும் பணிகளுக்கு  ரூ. 67 லட்சம் மதிப்பீட்டில்  திட்ட அறிக்கை தயார் செய்யபட்டுள்ளது. இந்த பணிக்கு கோவில் நிர்வாகத்திடம் உள்ள பணத்தில்  2 அல்லது 3 நாட்களில்  சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்” என கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்திருந்தது.  இந்நிலையில்  கிழக்கு வாசலில் நுழைவு கோபுரத்தின் முதல் நிலை மற்றும் 2வது நிலை சுவர்கள்  இன்று நள்ளிரவு 1.50 மணிக்கு விரிசல் அதிகமான நிலையில் முதல் நிலை கோபுரத்தின் சுவர், மளமளவென இடிந்து விழுந்தது. மேலும் நள்ளிரவில் ஏற்பட்ட சம்பவத்தால் பெரும் விபத்துக்கள் தவிர்கபட்டது.