வைணவ தலங்களில் முதன்மையான, பூலோக வைகுண்டம் என போற்றப்படும்  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டு முழுவதும் திருவிழா நடந்து கொண்டேயிருக்கும். இவற்றுள் தமிழ் ஆண்டின் ஆரம்பமாக சித்திரைத்தேர் கொண்டாட்டம் அமைகிறது. நம்பெருமாள் முகலாயர்கள் படையெடுப்பின் போது 48 வருடங்கள் வெளியில் அலைந்து திரிந்து 1371ல் மீண்டும் ஸ்ரீரங்கம் எழுந்தருளினார். விஜயநகரப்பேரரசின் சங்கமகுல மன்னனின் இரண்டாம் ஹரிஹரன் மகன் விருப்பாஷன உடையார் ஸ்ரீரங்கத்தின் சிற்றரசனாக நியமிக்கப்பட்டார். ஸ்ரீரங்கத்தின் பொருளாதாரம் மிக பாழ்பட்டு கிடந்த நேரமிது.


ஸ்ரீரங்கத்தை நிமிர்ந்தோங்க செய்தாக வேண்டும். பழைய எழுச்சி பெற்றாக வேண்டும் என மன்னன் சிந்தித்தான். அரங்கன் அவன் புத்தியில் புகுந்தான். விருப்பாஷன உடையாரின்  பெயரால் 1383ம் ஆண்டு சித்திரை மாதத்தில் சித்திரைத் தேரோட்டத்தை ஏற்படுத்தி வைத்தார். இவரது பிரதானிகள் மற்றும் அமைச்சர்கள் முத்தரசர் விட்டப்பர், சோமநாத தேவர், தேவராஜர் உள்ளிட்டோர் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு கொடை அளித்துள்ளனர். விருப்பண்ண உடையார் காலத்து கல்வெட்டுகளில் ஆய்வு செய்திடும் போது ஸ்ரீரங்கம் பெரியகோயிலை புனரமைக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் வெளிப்படுகின்றன. சித்திரைத் திருவிழா குறித்த தகவல், சுற்றுப்புற கிராமங்களுக்கு எல்லாம் பறையடிக்கப்பட்டு தெரிவிக்கப்பட்டது.




சித்திரை தேர் ஸ்ரீரங்கத்திற்கு திருப்புமுனையாக அமைந்தது..


மக்கள் அவரவர் சக்திக்கேற்ப விளைபொருட்கள் மற்றும் தனத்தை அரங்கனுக்கு அர்ப்பணிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. பல ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இத்திருவிழாவில் மக்கள் வெள்ளம் திரண்டது. மீண்டும் அரங்கனைக் கண்ட பக்தர்கள் மகிழ்ச்சியில் திகைத்தனர். ஸ்ரீரங்கம் பொன்னாலும், பொருளாலும் நிறைந்தது. அதன் பின்னர் ஸ்ரீரங்கம் பழைய நிலையை அடைந்தது. சித்திரைத் தேர் ஒரு திருப்பு முனையாக ஸ்ரீரங்கத்திற்கும், மக்களுக்கும் அமைந்தது என்பது வரலாறு. இதனால் ஸ்ரீரங்கத்தில் ஆண்டுதோறும் சித்திரை தேர்த் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. விருப்பன் திருநாள் எனும் சித்திரை தேர் திருவிழா சித்திரை மூலத்தில் கொடியேற்றமாகி ரேவதியில் திருத்தேர் உற்சவம் நடைபெறும்.




ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து வஸ்திர மரியாதை


ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேர் திருநாளை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலிலிருந்து ஆண்டுதோறும் நம்பெருமாள் மற்றும் தாயாருக்கு வஸ்திர மரியாதை(பட்டு பரிவட்டங்கள்) வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டும் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு நம்பெருமாள், தாயாருக்கு வஸ்திர மரியாதை கொண்டு வரப்படுகிறது. வஸ்திரம் மற்றும் மங்கல பொருட்கள் ரெங்கவிலாச மண்டபத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு சகல மரியாதைகளுடன் வலம் வரும்.


திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை


திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், ஸ்ரீரங்கம் “அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் சித்திரைத் தேர்த்திருவிழாவினை முன்னிட்டு வருகின்ற 06.05.2024 திங்கட்கிழமையன்று உள்ளுர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. இத்தேர்த்திருவிழாவினை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். எனினும் பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகள் நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது.


மேற்கண்ட விடுமுறை நாளில் மாவட்டத்தில் அரசு பாதுகாப்பு தொடர்பான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள், கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். இவ் உள்ளுர் விடுமுறையானது 2024 பாராளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் அலுவலர்கள், பணியாளர்களுக்கு பொருந்தாது.இந்த விடுமுறைக்குப் பதிலாக வருகின்ற 29.06.2024 சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.