திருச்சி சிறப்பு முகாமில் இலங்கை தமிழர்கள் உண்ணாவிரத போராட்டம்
திருச்சி மத்திய சிறையில் 4 நாட்களாக இலங்கை தமிழர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கை, வங்காளதேசம், ரஷியா, பல்கேரியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், தங்களை விடுதலை செய்யக்கோரி இலங்கை தமிழர்கள் 9 பேர் சிறப்பு முகாம் வளாகத்தில் நேற்று 4-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறை நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட அவர்கள் மறுத்து விட்டனர். இது பற்றி தகவல் அறிந்த போலீஸ் உயர் அதிகாரிகள் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. மேலும் தங்கள் மீதான வழக்குகள் முடிந்து தண்டனை அனுபவித்து வருகிறோம். தண்டனை காலம் முடிந்தும், எங்களை விடுதலை செய்யவில்லை. எனவே எங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தொடர்ந்து இலங்கை தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சிறப்பு முகாமில் பரபரப்பு ஏற்பட்டது.
Just In
இந்நிலையில் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்கள், சிறப்பு முகாம் வாசல் முன்பு நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், உண்ணாவிரதம் இருப்பவர்கள் பற்றிய எந்த ஒரு விவரத்தையும் போலீசார் தெரிவிப்பதில்லை என்றும், தண்டனை காலம் முடிந்து ஓராண்டுக்கு மேலாகியும், விடுதலை செய்யாமல் அடைத்து வைத்திருப்பதாக குற்றம்சாட்டியும், தங்களுக்கான நியாயம் கிடைக்க வேண்டும் என்று கோரியும் அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்