புதுக்கோட்டை அருகே அதிகாலையில் ஆடு திருடர்களை விரட்டி சென்ற எஸ்.ஐ. வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாகை மாவட்டம் தலைஞாயிறை சேர்ந்தவர் பூமிநாதன் (55) சிறப்பு சப் இன்ஸ்பெக்டரான இவர். திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 21 ஆம் தேதி  இரவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன், நவல்பட்டு தலைமை காவலர் சித்திரைவேலுவும், தனித்தனியே இருசக்கர வாகனங்களில் இரவு ரோந்து பணியில் இருந்துள்ளனர். கடந்த 21ஆம் தேதி அதிகாலை 1.30 மணி அளவில் பூலாங்குடி காலனி பகுதியில் இரண்டு இருசக்கர வாகனத்தில்  4 பேர்கள் வந்தனர். இதில் ஒரு இருசக்கர வாகனத்தில் ஒரு ஆடு இருந்துள்ளது, இதை பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் அவர்கள் நின்ற பகுதிக்கு சென்றபோது மர்ம நபர்கள் ஆட்டை அங்கேயே விட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பினர். ஆடு திருடர்களை பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பூமிநாதன் சித்திரைவேலுவும் விரட்டி சென்றனர்.




அப்போது பூலாங்குடி காலனியில் இருந்து திருவெறும்பூர் -கீரனூர் சாலையில் சூரியூர், சின்னபாண்டூரார்பட்டி, லட்சுமணன்பட்டி,பாலாண்டார்பட்டி, வழியாக 15 கிலோ மீட்டர் தொலைவுக்கு துரத்திச் சென்றபோது அந்த கும்பல் பள்ளத்துப்பட்டி ஊருக்குள் சென்றனர். இதனை பின்தொடர்ந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் அவர்களை விரட்டிச் சென்றார் பள்ளத்துப்பட்டியில் இருந்து புதுக்கோட்டை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வரும் வழியில் குறுக்கே இருந்த ரயில்வே தரைப் பாலத்தில் மழை நீர் தேங்கி இருந்ததால் அந்த கும்பல் அங்கேயே நின்று விட்டனர். 4 பேர்களையும் அழைத்து விசாரனை மேற்கொண்டார். இந்நிலையில் திடீரென்று பூமிநாதனை ஆயுதத்தால் தாக்கிவிட்டு தப்பி சென்றனர். எஸ்.எஸ்.ஐ பூமிநாதன் சம்பவ இடத்திலியே ரத்த வெள்ளத்தில் உயிர் இழந்தார்.இதனை தொடர்ந்து 4 தனிப்படை அமைத்து காவல்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். 24 மணி நேரத்தில் தனிப்படை காவல்துறையினர் 3 குற்றவாளிகளை கைது செய்தனர். தொடர்ந்து விசாரனை மேற்கொண்டத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் ஆடு திருடிய மணிகண்டனின் தாய்க்கு தொலைபேசி மூலமாக தகவல் தெரிவித்து இருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் வைத்து இருந்த ஆயுதத்தால் பூமிநாதனை பின்புறம் தாக்கினேன் என்று விசாரனையில் மணிகண்டன் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.




இந்நிலையில் மணிகண்டன் தெரிவித்த பரபரப்பு வாக்கு மூலத்தை தொடர்ந்து எஸ்எஸ்ஐ பூமிநாதன் கொலை வழக்கில் கைதான 2 சிறார்களுக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு சிறார்களும் புதுக்கோட்டையில் உள்ள சிறார் நீதிமன்றம் குழுமத்தில் நேற்று மாலை ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் சிறார் நீதி குழு நீதிபதி அறிவு உத்தரவை அடுத்து,  இருவரும் திருச்சி சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளனர். கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள இரண்டு சிறுவர்களும் புதுகையை சேர்ந்த 5 மற்றும் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.