தமிழகத்திலுள்ள டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியை மேற்கொள்ள விவசாயிகளுக்கு எந்த விதமான இடையூறும் இல்லாமல் மேற்கொள்ளும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக குறுவை சாகுபடிக்கு தேவையான பயிர் கடன் மற்றும் மானிய விலையில் உரங்கள் வழங்குவது போன்ற பல்வேறு திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. சிறு, குறு விவசாயிகள் யார் கடன் கேட்டு வந்தாலும் அவர்களுக்கு பயிர் கடன் வழங்க தமிழக முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். இதன்படி இந்த ஆண்டு கூட்டுறவு வங்கிகள் மூலம் 11,500 கோடி பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களிம் தற்போது வரை 160 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளதாக வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் 147 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன கடந்த ஆண்டு திருச்சி மாவட்டத்தில் 12 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. இதற்கு 35 கோடி வட்டியில்லா பயிர்க்கடன் 10 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. அதே போல் நடப்பாண்டு 12 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய 10 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூபாய் 40 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை ஆயிரத்து 491 பேர்களுக்கு ரூபாய் 11.59 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது.
இதில் குழுவில் குறுவை, உள்ளிட்ட அனைத்து பயிர்களும் கடன் வழங்கப்பட்டுள்ளது திருச்சி மாவட்டத்தில் உள்ள 147 தொடக்க வேளாண்மை கடன் சங்கங்கள் மூலம் கடந்த ஆண்டு ரூபாய் 400 கோடி பயிர் கடன் வழங்கப்பட்ட நிலையில் நடப்பாண்டு 440 கோடி பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது இது கடந்த ஆண்டை காட்டிலும் 40 கோடி ரூபாய் அதிகம்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பாண்டு குறுவையில் இதுவரை 33 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 27ஆம் தேதி வரை 4,405 விவசாயிகளுக்கு 33.40 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த ஆண்டு 2,719 விவசாயிகளுக்கு குறுவையில் பயிர் கடனாக ரூபாய் 20.23 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மேலும் திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் 137 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடப்பாண்டில் குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்கு 314 கோடியே 50 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 28ஆம் தேதி வரை 15 கோடியே 67 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2 ஆயிரத்து 691 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
நாகை மாவட்டத்தில் 57 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் உள்ளது. இந்த வங்கிகள் மூலம் நடப்பு ஆண்டில் குறுவை பயிர்கடன் 5,000 விவசாயிகளுக்கு 122.50 கோடி வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 97.28 கோடி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 7,328 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, என்ற மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு கூட்டுறவுத்துறை மூலம் விவசாயிகளுக்கு விவசாயக் கடன் வழங்கப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இந்த ஆண்டு விவசாய கடன் வழங்க தமிழக அரசு 111 கோடி ஒதுக்கீடு உள்ளது. இதுவரை மயிலாடுதுறை பகுதியில் 1,129 விவசாயிகளுக்கு 6.65 கோடி, தரங்கம்பாடி பகுதியில் 143 விவசாயிகளுக்கு 1.31 கோடியும், சீர்காழி பகுதியில் 316 விவசாயிகளுக்கு ரூபாய் 2.44 கோடியும் கடன் வழங்கப்பட்டுள்ளது என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.