திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து, திண்டுக்கல் நோக்கி செல்லும் சாலையில் 18 கிலோமீட்டர் சென்றால் இடதுபுறத்தில் இனாம்குளத்தூர் செவத்தகனி பிரியாணி செல்லும் வழி என்று பலகை வைக்கப்பட்டிருக்கும். அங்கிருந்து 3 கிலோமீட்டர் சென்றால் சுவையான செவத்தகனி பிரியாணி கடை வந்துவிடும்.


பிரியாணிக்கு ஏராளமான கடைகள் பிரபலமாக இருக்கும் நிலையில், இந்தக் கடையில் அப்படி என்ன ஸ்பெஷல்? 50 ஆண்டு காலமாக ஒரே சுவையை கொடுத்துக்கொண்டிருக்கும் சிறப்பு வாய்ந்த கடைதான் இது. அதுமட்டுமல்லாமல் மசாலாக்களை அவர்களே தயாரிப்பது, மற்றும் விறகு அடுப்பில் பிரியாணி செய்து தம் வைப்பது போன்ற சிறப்பு அம்சங்கள்தான் இந்த பிரியாணியின் ருசிக்கு காரணம் என்று கூறுகிறார், கடையின் உரிமையாளர்.


ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே இயங்கும் இந்த கடையில் மதியம் 12 மணியில் இருந்து, 2 மணிவரை மட்டுமே சுவையான பிரியாணி கிடைக்கும். இதன் காரணமாக காலை முதலே இந்த பிரியாணியை வாங்க கூட்டம் களைகட்டிவிடும் இந்த பிரியாணியை வாங்குவதற்கு கூட்டம் கூட்டமாக மக்கள் வரிசையில் நின்று வாங்கி செல்கின்றனர். 




இத்தகைய கடையைப் பற்றி கடையை நிர்வகித்து வரும் இர்ஷாத் அகமது மற்றும் இஷ்டியாக் அகமது ஆகியோர் இடம் கேட்டபோது, தனது தாத்தா அப்துல்ரகுமான் தொடங்கிவைத்த இந்த கடை, அந்தக்காலத்திலேயே உழைப்பவர்களுக்கு கிடைக்கும் விடுமுறை நாட்களில் சுவையான பிரியாணி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்கப்பட்டது என்று கூறுகின்றனர். அதையே தாங்களும் தொடர வேண்டும் என்று இப்போது வரை ஞாயிற்றுக்கிழமையில் அதுவும் இரண்டு மணிநேரத்தில் இந்த கடை இயக்கப்படுகிறது என்று கூறுகின்றனர்.


அதுமட்டுமல்லாமல், கொடுக்கும் பிரியாணியை சுவையாகவும் தரமாகவும் கொடுக்கவேண்டும் என்பதற்காக கொப்பம்பட்டி ஆலையில் இருந்து நேரடியாக சீரக சம்பா அரிசியை இறக்குமதி செய்தும், பண்ணையில் தங்களுக்கு என்று வளர்க்கும் இறைச்சிகளை தான் இங்கு பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், இதில் உபயோகப்படுத்தப்படும் மசாலாக்கள் அனைத்தும் வீட்டிலேயே தயார் செய்யப்படுகின்றன. இதன் காரணமாக பிரியாணி ஃப்ரெஷ்ஷாக இருக்கின்றது. இதன் காரணத்தினாலேயே மக்கள் தங்கள் கடையை தேடி வருகின்றனர் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.




மேலும் இது ஒரு லேண்ட்மார்க் போன்று அமைந்து விட்ட காரணத்தினால் இடத்தையும் மாற்றாமல் 54 வருடமாக ஒரே இடத்திலேயே இந்த கடையை இயக்கி வருகிறோம். இதன் காரணமாக மக்கள் கூட்டம் இங்கு பெருமளவு குவிகின்றது என்று கடை உரிமையாளர்கள் கூறினர். மேலும், கிராமத்து மக்களுக்கு சுவையான பிரியாணியை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தனது தாத்தா இந்த கடையை தொடங்கியதாகவும், தற்போது கிராமத்தையும்தாண்டி பல ஊர்களிலிருந்தும் பல மாநிலங்களில் இருந்தும் இங்கு வந்து பிரியாணி சாப்பிடுகின்றனர் என்று நெகிழ்வுடன் தெரிவிக்கின்றனர் கடை உரிமையாளர்கள்.




இந்த இனாம்குளத்தூர் செவத்தகனி பிரியாணி கடையில் பிரியாணி மட்டும் அல்லாமல் ஸ்பெஷலாக கிடைக்கும் பிய்த்துபோட்ட மிளகு கோழி கறி, வஞ்சிரம் மீன், மட்டன் கோலா மற்றும் மட்டன் சுவரொட்டி போன்ற வகை வகையான உணவுகளும் கிடைக்கின்றன. மேலும் பிரியாணியை சாப்பிடும்போது அதில் உள்ள இறைச்சிகளும் நன்றாக வெந்து சுவை அருமையாக இருக்கும் என்று இங்கு வரும் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.


ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திருவிழா போன்று இந்த கடை களைகட்டி வருகிறது. இங்கு 100, 200 பேர் அல்ல சுமார் 1500 பேருக்கும் மேற்பட்டோர் ஞாயிற்றுக்கிழமைகளில் பிரியாணி சாப்பிட வந்து குவிந்து விடுகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, சுமார் 50 ஆண்டு காலமாக மூன்று தலைமுறையினர் நடத்திவரும் இந்த பிரியாணி கடை, அந்தக்கால சுவையையும், மணத்தையும் நமக்கு நினைவுபடுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை.