அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி. பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருந்தது.. ”தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில், திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக அதிமுக ஆட்சியில்  கொண்டுவரப்பட்ட திட்டங்களை முறையாக பராமரிக்கவில்லை. இதனால் மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகிறார்.  


குறிப்பாக திருச்சி மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள், திமுக ஆட்சியில் கடந்த 3 ஆண்டு காலமாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சாலைகள் அனைத்தும் மோசமான நிலையில் உள்ளது.


மேலும், சாலைகளில் நடந்து செல்பவர்களும், வாகனங்களில் செல்பவர்களும் விபத்துக்குள்ளாவதாகவும், இங்கு ஏற்படக்கூடிய காற்று மாசு காரணமாக சுவாசக் கோளாறு மற்றும் சருமப் பிரச்சனை போன்ற நோய்களால் பாதிக்கபட்டு வருகிறார்கள். 


மேலும், சொத்து வரி, வீட்டு வரி, குப்பை வரி, பாதாள சாக்கடை இணைப்புக் கட்டணம், தொழில் வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளை மாநகராட்சி நிர்வாகம் உயர்த்தி உள்ளதால் மக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருவதாக கூறுகின்றனர். 




திருச்சியில் குடிநீர் கலப்படம் - தொற்று நோயால் மக்கள் அவதி 


அதிமுக ஆட்சியின்போது  திருச்சி மாநகராட்சியில் "Smart City" அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் பல்வேறு நலத் திட்டப் பணிகள், சாலைப் பணிகள், பாதாள சாக்கடைப் பணிகள், பல இடங்களில் உடற்பயிற்சிக் கூடங்களுடன் கூடிய சாலையோர பூங்காக்கள், கைப்பிடிகளுடன் கூடிய நடை மேடைகள், பல சமூக நலத் திட்டப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வந்தது.


ஆனால், திமுக அரசு பதவியேற்றது முதல், அம்மா உணவகங்கள் உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.


இதனால் திருச்சி மாநகராட்சி பகுதிகளில் குடி தண்ணீருடன் கழிவு நீர் கலந்து வருவதால், கள்ளத் தெரு, ராணி தெரு, பெரிய சௌராஷ்டிரா தெரு, சந்துகடை, சமஸ்பிரான் தெரு, முத்தழகு பிள்ளை தெரு, கொத்தமங்கலம், பிராட்டியூர், பீரங்கி குளத் தெரு, அல்லிமால் தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வசிக்கும் மக்களிடையே டெங்கு, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் பரவி வருவதோடு, 100-க்கும் மேற்பட்டோர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் மரணமடைந்துவிட்டதாகவும் அப்பகுதி மக்கள் ஆதங்கத்தோடு தெரிவிக்கின்றனர்.




திருச்சி மாநகராட்சியை கண்டித்து - அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..


இந்நிலையில், திருச்சி மாநகராட்சியில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகளைக் கண்டித்தும், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டு செயல்படுத்தப்பட்ட திட்டங்களை பராமரிக்காமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கிடப்பில் போடபட்டுள்ளது. 


ஆகையால் மாநகராட்சி நிர்வாகம் மற்றும்  திமுக அரசைக் கண்டித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருச்சி மாநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில், (20.8.2024 செவ்வாய் கிழமை) திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.


இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ப. மோகன் அவர்கள் தலைமையிலும், திருச்சி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான  சீனிவாசன்  முன்னிலையிலும் நடைபெறும்” என அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.