இந்திய அளவில் 550 ரயில்வே ஸ்டேஷன்களை 'அம்ரித் ஸ்டேஷன்'களாக தரம் உயர்த்தவும், 1500 மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதில் 44 ரயில்வே ஸ்டேஷன்கள் 193 மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் தெற்கு ரயில்வேயில் அமைகிறது. தமிழக ரயில்வே கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தும் முயற்சியாக, உலகத்தரம் வாய்ந்த, அழகிய முகப்புடன் ஸ்டேஷன்கள், பயணிகளுக்கு நவீன வசதிகள் என ஸ்டேஷன்கள் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 32 ரயில்வே ஸ்டேஷன்களுக்கு ரூ.803.78 கோடி பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும் ரூ.476.72 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4 மேம்பாலங்கள், 106 சுரங்கப்பாதைகள் பயன்பாட்டுக்காக துவக்கி வைக்கப்பட்டது. மேலும் ரூ.1295.16 கோடியில் 30 மேம்பாலங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த 140 பாலங்களும் லெவல் கிராசிங்குகளுக்கு மாற்றாக அமையும். இதன் மூலம் ரோடுகளை பயன்படுத்துவோர் பாதுகாப்பாகவும், லெவல் கிராசிங்கில் நீண்ட நேரம் காத்திராமலும் பயணிக்க முடியும்.




இந்நிலையில் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில்  செய்தியாளர்களை சந்தித்த ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் பேசியது.. இன்று 26ம் தேதி, நாடு முழுவதும் அம்ரித் பாரத் திட்டத்தில், 554 ரயில்வே ஸ்டேஷன்கள், 1,500க்கும் மேற்பட்ட ரயில்வே மேம்பாலங்கள், தரைமட்ட பாலங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிப்பதோடு, அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது. திருச்சி கோட்டத்தில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி புதுச்சேரி, விழுப்புரம், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய நான்கு ஸ்டேஷன்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.  இன்று 26ம் தேதி, விருத்தாச்சலம், திருவண்ணாமலை, திருவாரூர் மற்றும் கும்பகோணம் ஆகிய நான்கு ஸ்டேஷன்களில் அம்ரித் பாரத் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதன்படி, விருத்தாசலம் ஸ்டேஷன் 9.17 கோடியில், திருவண்ணாமலை ரூ8.17 கோடி, திருவாரூர் ரூ8.69 கோடி, கும்பகோணம் ரூ 120.67 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும்.




மேலும், திருப்பாதிபுலியூர், மணக்கால், பல்லவராயன்பேட்டை, மாப்படுகை, சஞ்சீவி நகர், ஆலத்துார், வில்லியனுார் ஆகிய ஏழு இடங்களில், 224.94 கோடி மதிப்பில் புதிய மேம்பாலங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த பணிகளை மார்ச் மாதத்தக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 91.11 கோடியில் பணிகள் முடிந்த 26 தரைமட்ட பாலங்களை திறந்து வைத்தார். திருச்சி கோட்டத்தில், ரயில் தண்டவாளப் பகுதியில் கால்நடைகளை நடமாட விடுவதும், அபாய சங்கிலியை பிடித்து இழுப்பதும் அதிகம் நடக்கிறது. இதனால், ரயிலுக்கு சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில், இதை பொதுமக்கள், பயணிகள் தவிர்க்க வேண்டும். திருச்சி– விழுப்புரம் மற்றும் விருத்தாசலம் வழித்தடத்தில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை, 321 வழக்கு பதிவாகி உள்ளதாக திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன்  தெரிவித்ததார்.