திருச்சி மாநகராட்சியில் இப்போது 65 வார்டுகள் உள்ளது. திருச்சி மாநகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, மாநகரை சுற்றியுள்ள வளர்ச்சி அடைந்த பகுதிகளை இணைத்து 100 வார்டுகள் கொண்டதாக திருச்சி மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்படும் என்று கடந்த 2021 ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டசபையில் நகராட்சி நிர்வாகத் துறை, மானியக் கோரிக்கையில் அமைச்சர் நேரு அறிவித்தார். இதனைத்தொடர்ந்து மாநகராட்சி விரிவாக்க பணிகளுக்காக அருகிலுள்ள ஊராட்சிகளை இணைக்கவும், வார்டுகளை சீரமைக்கும் பணிகளையும் மாநகராட்சி, மாவட்ட நிர்வாகங்கள் பணிகளை தீவிரமாக தொடங்கினர். குறிப்பாக திருச்சி மாநகராட்சி விரிவாக்கம் செய்யும் வகையில் அந்தநல்லூர் ஒன்றியம், மல்லியம்பத்து, மருதாண்ட குறிச்சி, கம்பரசம்பேட்டை, முத்தரசநல்லூர், மணிகண்டம் ஒன்றியம், முடிகண்டம், மேக்குடி, கே. கள்ளிக்குடி, தாயனூர், நாச்சிகுறிச்சி, சோமரசம்பேட்டை, நாகமங்கலம், புங்கனூர், திருவெரும்பூர் ஒன்றியம், பணைய குறிச்சி ,குண்டூர், நவல்பட்டு, சோழமாதேவி கீழக்குறிச்சி, லால்குடி ஒன்றியம், தாளக்குடி, அப்பாதுரை எசனைக்கோரை, புதுக்குடி, மண்ணச்சநல்லூர் ஒன்றியம், மாதவப்பெருமாள் கோயில், பிச்சாண்டார் கோயில், கூத்தூர், ஆகிய 25 ஊராட்சிகள் இணைக்கப்பட்டு 100 வார்டுகளாக திருச்சி மாநகராட்சி உருவாக்கப்பட உள்ளது என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக புதிதாக இணைக்கபட உள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்களை சந்தித்து அவர்களின் கருத்துகளை கேட்டறிந்தனர். அப்போது பல பகுதி மக்கள் மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மாநகராட்சி விரிவாக்கம் செய்யும் பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கபட்டது. இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வெளியீட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருந்தது.. திருச்சி மாவட்டம் 4,404 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. அதில் தற்போதுள்ள 281.14 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடன் உள்ள உள்ளூர் திட்டப் பகுதியினை 804.55 சதுர கிலோமீட்டர் பரப்பளவாக விரிவாக்கம் செய்து போக்குவரத்து, சுற்றுசூழல் மற்றும் நீர்வள உள்கட்டமைப்பு, பொருளாதாரம் மற்றும் உத்தேச நிலஉபயோக விபரங்களுடன் கூடிய உத்தேச முழுமைத் திட்ட வரைவு திருச்சி மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தால் தயார் செய்யப்பட்டு அரசாணை எண்.13, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி (நவ-4(2) துறை, நாள். 13.01.2024 அன்று அரசால் இணக்கமளிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 07.02.2024 அன்று தமிழ்நாடு அரசிதழில் பிரசுரம் செய்யப்பட்டு அதிலிருந்து 60 நாட்கள் வரை இத்திட்ட வரைவின் மீதான பொதுமக்களின் கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகள் பெறப்படவுள்ளது.
இத்திட்டம் குறித்த முழு விபரங்களை பார்வையிடவும், அது குறித்த கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளை எளிதில் தெரிவிப்பதற்காகவும் www.trichymasterplan.com என்ற இணையதள முகவரி உருவாக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் தங்கள் கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளை மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம், திருச்சி மாவட்டம், காஜாமலை மெயின் ரோடு, காஜாமலை, திருச்சிராப்பள்ளி 620 023 முகவரியில் கடிதம் வாயிலாகவே, masterplantrichy@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது மேற்குறிப்பிட்டுள்ள இணையதளப் பக்கத்தில் உள்ள படிவம் வாயிலாகவோ தெரிவிக்கலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.