தமிழகத்தில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று நேற்று உருவானது. இது தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டி நிலவி வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தமிழகம், புதுவை கடற்கரையை நோக்கி நகரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இன்று வலுவடைந்தது. இதனால் தமிழகத்தில் வருகிற 14-ந் தேதி வரை பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை உள்ளிட்ட வட தமிழக கடலோர பகுதிகளில் இன்று அதிகனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு இல்லை என்றும் அது மேலும் வலு குறைந்து கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் தமிழகம், புதுச்சேரி நோக்கி நகர்ந்து வருகிறது. மேலும், தமிழகத்தில் உள்ள டெல்டா மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிகனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் நேற்று அதிகாலை 4 மணி முதல் கன மழை பெய்து வருவதால் திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். மேலும் கன மழைக்கு வாய்ப்புள்ளதால் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை கடந்த 10 மணி நேரத்தில் அதிகபட்சமாக பொன்மலை பகுதியில் 40.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக லால்குடி பகுதியில் 15 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களாக திருச்சி மாவட்டம் லால்குடி, மனப்பாறை, மருங்காபுரி, முசிறி, மண்ணச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மற்றும் மிதமான மழை பெய்து வந்தது. இருப்பினும் திருச்சி மாநகர் பகுதியில் மழை பெய்யவில்லை. நேற்று முந்தினம் காலை முதல் திருச்சி மாநகர் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் திருச்சி மாநகர பகுதிகளான சத்திரம் பேருந்துநிலையம், மத்திய பேருந்து நிலையம், பாலக்கரை, உறையூர், பொன்மலை, அரியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாணவர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் கனமழை காரணாமாக தமிழகத்தில் 20 மாவட்டங்களில் நாளை(12-11-2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், வேலூர், மயிலாடுதுறை, நீலகிரி, திருவாரூர், தஞ்சை, கரூர், புதுக்கோட்டை, சேலம் கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.