புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே எஸ்.களபம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 40-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் பள்ளி தொடங்கி நடந்து கொண்டிருந்தது. மாணவர்கள் ஆசிரியர்கள் நடத்திய பாடத்தை கவனித்து கொண்டிருந்தனர். அப்போது 4-ம் வகுப்பறையில் மேற்கூரை சிமெண்டு பூச்சு இடிந்து விழுந்தது. இதில் அந்த வகுப்பு மாணவன் சுப்பிரமணி மகன் பரத் (வயது 9) மீது மேற்கூரை கான்கீரிட்டில் சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்ததில் படுகாயமடைந்தான். ஆசிரியர்கள் மாணவனை மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாணவன் அனுமதிக்கப்பட்டான். மற்ற மாணவர்கள் எந்தவித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேற்கூரை இடிந்து விழுந்து மாணவன் படுகாயமடைந்த சம்பவம் அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கு விரைந்து வந்தனர். மேலும் பொதுமக்களும் பள்ளியின் முன் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 




தங்களது குழந்தைகளுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை என்று தெரிந்த பின்னர் தான் பெற்றோர் நிம்மதியடைந்தனர். இதையடுத்து அந்த வகுப்பறை மாணவர்களை மரத்தடியில் அமரவைத்து பாடம் எடுக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி ஒன்றிய ஆணையர் நளினி, கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழ்செல்வன், கறம்பக்குடி தாசில்தார் விஸ்வநாதன், ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வடிவேல் மற்றும் இன்ஸ்பெக்டர் அழகம்மை ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மாணவன் மீது வகுப்பறையின் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், இந்த பள்ளி கட்டிடம் கட்டி 40 ஆண்டுகள் ஆகிறது. பள்ளியின் சுற்றுச்சுவர்கள் மற்றும் மேற்கூரைகள் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதுகுறித்து தாங்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் ஒன்றிய ஆணையரிடமும் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், பள்ளியின் வகுப்பறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரு மாணவன் மட்டும் படுகாயமடைந்துள்ளான். வேறு யாருக்கும் எந்த விதமான காயமும் ஏற்படாமல் உயிர் தப்பினர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனிமேலாவது இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.




இந்த சம்பவம் தொடர்பாக பணியில் கவனக்குறைவாக இருந்ததாக பள்ளி தலைமை ஆசிரியை மகாலட்சுமியை பணியிடை நீக்கம் செய்து புதுக்கோட்டை கல்வி மாவட்ட அதிகாரி மஞ்சுளா உத்தரவிட்டுள்ளார். முன்னதாக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர் பரத்திடம் சுற்றுச்சூழல் துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் நலம் விசாரித்தார். மேலும் தகுந்த சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு அவர் உத்தரவிட்டார். அப்போது மாவட்ட ஆட்சியர்  கவிதாராமு மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண